தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா


தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இந்த இரஜினாமா கடிதத்தை அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பபியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் காணிகளை பறித்து விகாரைகளை அமைக்கும் செயற்திட்டத்தை தொல்பொருள் திணைக்களம் இடைநிறுத்த மறுப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை மீறி அல்லது, அதற்கு அடிபணியாமல், தொல்பொருள் திணைக்களம் சுயமாக அதிகாரத்தைப் பயன்படுத்த முற்படுவது குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

அண்மையில் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கல் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை நிறுத்துமாறும், பௌத்த விகாரைகளைக் கட்டும் பணிகளை இடைநிறுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும் தொல்பொருள் திணைக்களம் தமது செயற்பாடுகளை இன்னமும் நிறுத்திக் கொள்ளாத நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments