மகாவலி ஆபத்து:சாள்ஸ்

 


மகாவலி அதிகார சபையின் செயற்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும்hன முயற்சி. தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

“மகாவலி அதிகார சபையால் முல்லைத்தீவு, வவுனியா, மாவட்டங்களில் 1988  ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 14 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டு யுத்தத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது முழுமையாக அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவி வெலி ஓயா என்ற ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு, கிழக்கை பிரிக்கின்ற நோக்கத்துக்காக இந்த மகாவலி அதிகார சபை புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கி பிற்பாடு கொக்கிளாய் முதல் செம்மலை வரை இருக்கின்ற 6 கிராம சேவகர் பிரிவுகளை அபகரிக்க முயற்சி எடுத்த போது எங்களுடைய தொடர் அழுத்தம் காரணமாக தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. 

மகாவலி என்பது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் சிங்கள இனப்பரம்பலையும் செய்வதற்காக அரசாங்கத்தால் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு.

தற்பொழுது  மகாவலி  வலயம் என்ற ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் 7 கிராம அலுவலர் பிரிவுகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளும் ,மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்களாக மொத்தம் 37 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி அதிகார சபை  புதிய  வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதெனவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


No comments