வவுனியாவில் கொள்ளையிடுவதற்காக இருவரைக் கொலை செய்தவருக்கு இரட்டைத் தூக்கு


நகைகளைக் கொள்ளையிடும் நோக்கத்துக்காக இருவரை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வவுனியா சமளங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து இருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் மீது வவுனியா நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று மேல் நீதிமன்றுக்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டது.

எதிரி மீது கொள்ளை, ஆட்கொலைகள் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்களைக் கொண்ட குற்றப்பத்திரத்தை சட்ட மா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது.

“எதிரிக்கு எதிரான 11 குற்றச்சாட்டுக்களும் தடயவியல் சாட்சிகள், நிபுணத்துவ சாட்சியத்தின் அடிப்படையில் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால் அவரை குற்றவாளியாக மன்று இனங்கண்டுள்ளது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

அத்துமீறல், கொள்ளை உள்ளிட்ட முதல் 9 குற்றச்சாட்டுக்களுக்கும் எதிரிக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்படுகிறது. தண்டப்பணம் செலுத்தாவிடின் இரண்டு மாத கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

இருவரைக் கொலை செய்த குற்றங்களுக்காக இரண்டை தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஜனாதிபதி தீர்மானிக்கும் தினத்தில் – இடத்தில் எதிரியின் உயிர் உடலிலிருந்து பிரியும் வரை தூக்கிலிடப்படுவார்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்

No comments