பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பலவந்தமாக நிறைவேற்ற மாட்டார்களாம்




பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பலவந்தமாக ஒருபோதும்  நிறைவேற்றப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர் சாந்தினி கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளிப்படுத்தி இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சட்டம் போன்று அதனை எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் அமைப்பினர் பூதாகரமாக்கி செயற்பட்டு வருகின்றனர்.

இதனை விட கடுமையான சட்டம் இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவில் அந்த சட்டத்தை பயன்படுத்தியே தற்போது ராகுல் காந்தி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது பிரஜா உரிமையை இல்லாமல் செய்யவும் இடமிருக்கிறது.

எமது நாட்டிலும் தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் கடுமையானது. அதனால்தான் அதற்கு எதிராக சர்வதேச நாடுகள் சிவில் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை நீக்குமாறு தெரிவித்து வந்தன.

மனித உரிமை அமைப்புகளும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தன. அதனால்தான் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைத்து, பல முன்னேற்றகரமான திருத்தங்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அதனை விமர்சித்து வருவதால், அதுதொடர்பில் கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கிறது.“ என தெரிவித்துள்ளார்.

No comments