அச்சுவேலி மத சபையை அகற்ற கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு!


அச்சுவேலியில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மத சபை யை அகற்ற கோரி தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கும் முகமாக சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நெசவு சபையை அடாத்தாக கையகப்படுத்தி அதன் காணிக்குள் கிறிஸ்தவ மத சபை ஒன்று கட்டடம் கட்டி செப ஆராதனைகளை நடாத்தி வருகின்றது. 

குறித்த சபையை சேர்ந்தவர்கள் அதிக ஓலி எழுப்பி அயலவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக அயலவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை , அதிக சத்தம் எழுப்பி செபித்துள்ளனர். 

அந்நிலையில் தமது செப கூட்டத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அயல் வீடொன்றினுள் போதகர் , அவரது மகன் உள்ளிட்ட மூவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடாத்தி இருந்தனர். 

தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யததை அடுத்து போதகர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தனர். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியிட்டார்கள் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிக்கை அலுவலகத்தினுள் போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் என 30க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து ஊடகவியலாளர்கள் , ஊடக பணியாளர்களை அச்சுறுத்தி இருந்தனர். 

அது தொடர்பில் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனை அடுத்து , போதகர் உள்ளிட்ட ஆறுபேரை கைது செய்து நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்று போதகர் உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அச்சுவேலியில் அமைந்துள்ள குறித்த சபையானது அரச நெசவு சாலைக்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தினை தொடர் போராட்டமாக முன்னெடுக்கும் முகமாக வீதியோரமாக கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது , வீதியோரத்தில் கொட்டகை அமைக்க பொலிஸார் அனுமதிக்கவில்லை. 

அதனை அடுத்து முன்னாள் உள்ள தனியார் காணிக்குள் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். No comments