யாழில் உள்ள பிரபல பாடசாலையில் மாணவிகளுடன் ஆசிரியர் சேட்டை - பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு!


வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில்  சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர் , மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல் , பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

அந்நிலையில் மாணவி ஒருவர் பெற்றோர்களிடம் முறையிட்ட நிலையில் பெற்றோர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து ஆசிரியரின் செயற்பாடு குறித்து எடுத்து கூறி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். 

அதற்கு அதிபர் , சாதகமாக நடந்து கொள்ளாது. முறையிட்ட பெற்றோருடன் முரண்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவியின் பாடசாலை விலகல் பாத்திரத்தை வாங்கி கொண்டு மாணவியை வேறு பாடசாலையில் இணைத்துள்ளனர். 

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments