மல்லாகம் நீதிமன்றில் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டவர் மறியலில்


யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில், மன்றினுள் பெண்ணொருவரை தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அச்சுவேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் அப்பகுதி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் குறித்த பெண் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம், இளைஞனை கைது செய்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இளைஞனை நீதிமன்றில் முற்படுத்தினர். 

நீதிமன்றில் வழக்கு விசாரணையின் போது , குறித்த பெண் இளைஞனுக்கு எதிராக மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தார். சாட்சியம் அளித்த பின்னர் அந்த பெண் சாட்சி கூட்டினை விட்டு இறங்கி மன்றின் வெளியே சென்ற போது , எதிராளியான இளைஞன் அப்பெண்ணை வழிமறித்து மன்றினுள் வைத்தே தாக்கியுள்ளார். 

அதனை அடுத்து , நீதிமன்ற கடமையில் இருந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து , நீதிமன்ற அவமதிப்பு, பெண்ணொருவரை தாக்கியமை  உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இளைஞனை மன்றில் முற்படுத்தினர். 

அதனை அடுத்து இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார்.  

No comments