ஊடகப்படுகொலைகள் சமரசமில்லை:யாழ்.ஊடக அமையம்!



வடக்கு - கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லையென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ்.ஊடக தலைவர்களிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று ஏற்பாடாகியிருந்தது.

அப்பொழுதே ஊடகப்படுகொலைகளிற்கான நீதி தொடர்பில் யாழ்,ஊடக அமையம் வலியுறுத்தியிருந்தது.

அதேவேளை படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குமாறும் ஊடக அமையம் வலியுறுத்தியுள்ளது.

மனுவை இன்றைய தினம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘யாழ். ஊடக அமையம்’ சார்பில் அதன் தலைவர்கள் கையளித்தபோது, 2016ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இதே கோரிக்கையை நாம் விடுத்திருந்ததை தலைவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

யாழ்.ஊடக அமையம் கையளித்த மகஜரில் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை யாழ்.ஊடக அமையம் தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளது. 

2000ம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுககொலையுடன் அரங்கேறிய ஊடகப்படுகொலைகள் நீண்டே சென்றிருந்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள்; கைதுசெய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை என்பது அனைவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

வடக்கு - கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண நாம் தொடர்ந்துகுரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென மீண்டும் நாம்  கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை நல்லாட்சி காலத்தில் தாங்கள் பிரதமராக இருந்த காலப்பகுதியினில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களிற்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடு ஒன்றை வழங்க முன்வந்து விசாரணை குழுவொன்றையும் அமைத்திருந்தீர்கள்.

குழுவும் விசாரணைகளை முன்னெடுத்த போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னராக அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

பின்னராக கோத்தபாயராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லையென வாதிடப்பட்டிருந்தது. 

எனினும் தற்போது தாங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைகளின் பிரகாரம் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களது குடும்பங்களிற்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதில் கவனத்தை செலுத்த கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments