வரமாட்டேன்: சிறீதரன் மறுப்பு!இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பங்கெடுத்ததாக குற்றஞ்சாட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் காவல்துறை கட்டளை நேற்று (14) வழங்கபட்டுள்ளது.

எனினும் காவல்துறை கட்டளை  சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே, கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி, அதனை மீளக் கையளித்துள்ளார் சி.சிறீதரன்.

இந்நிலையில் காவல்துறை தமிழில் மொழிபெயர்த்து கையளித்தபோது, நீதிமன்றத்துக்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர, நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பை காவல்துறை வழங்கமுடியாதென சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பேரணியில் பங்கெடுத்திருந்ததாக சிவகுரு ஆதீனத்தை சேர்ந்த தவத்திரு வேலன் சுவாமிகளை நீதிமன்றில் ஆஜராக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட எண்மரை நீதிமன்றில் ஆஜராக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி மட்டக்களப்பில் பெரும் மக்கள் பங்கெடுப்புடன் முடிவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments