பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை  15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப்

பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரினை திரான்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கணேஸ் தம்பையா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து, மாவீரர்களின் திரு உருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை 28-09-1998 அன்று நடந்த ஓயாத அலைகள் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த லெப்டினன இளந்தேவியின் சகோதரி அவர்கள், 2ம் லெப்.பன்னீர் செல்வன் (28-05-2000 ஓயாத அலைகள்3). வீரவேங்கை உலகரசி(18-11-1998 கிளிநொச்சி) மேஜர் உலகப்பன் (20-04-1998 திருகோணமலை) வீரச்சாவடைந்தவர்களின் சகோதரியும் மற்றும் 27-09-1998 வீரச்சாவடைந்த லெப்டினன் இளந்தேவி (ஓயாத அலைகள்)அவர்களின் சகோதரி ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வுகளாக கரோக்கி இசையுடன் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள். தமிழ்ச் சோலை மாணவிகளின் விடுதலைப் பாடல்களுக்கான நடனங்களும், கேணல் கிட்டு நினைவு சுமந்த கவிதை மற்றும் பேச்சுக்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. கரோக்கி இசைப்பாடல்களை தமிழ்ச்சோலை மாணவர்களும் தமிழர்கலைபண்பாட்டுக்கழக பாடகர்களும் பாடியிருந்தனர். நடனங்களை புளோமினில் தமிழ்ச்சோலை, திரான்சி தமிழ்ச்சோலை, ஆகியவற்றின் மாணவிகள் நடாத்தியிருந்தனர்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய முன்னை நாள் போராளியும் தாயக செயற்பாட்டாளருமான திரு.அமுதன் (ஜமால்) அவர்கள், கேணல் கிட்டு அவர்களின் ஈகம்பற்றியும் புலம்பெயர் தேசங்களில் அவருடைய சிறப்பான பணிகள்பற்றியும் களத்தில் அவருடைய போரிடும் திறம்பற்றியும் உணர்வு பொங்க எடுத்துரைத்திருந்ததுடன், இளம் சமூகத்தினர் குறித்த விடயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் இவர்களின் தடம் பற்றி நாம் பயணிக்க வேண்டும் என்பதாக அவருடைய உரை அமைந்திருந்தது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் படல் ஒலிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.

No comments