போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம்


யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

தேசிய பொங்கல் விழாவிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது 

ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்ற வேளை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு  போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற இடத்தினை நோக்கி சென்றது.

அதன் போது , நல்லூர் அரசடி வீதி - வைமன் வீதி சந்திக்கு அருகில் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினர். 

பொலிசாரின் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு போராட்ட பேரணி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டு போராட்ட காரர்களை துரத்த முற்பட்டனர். 

இருந்த போதிலும் போராட்டக்காரர்கள் அவ்விடத்தில் நின்று , காணிகளை விடுவிக்க கோரி , காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய கோரி , அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கோஷங்களை எழுப்பினர். 

No comments