வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை!


காலநிலை சீரின்மையால், வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடு பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையினால் 500 க்கும்  மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருந்தன.

உயிரிழந்த கால்நடைகள் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈட்டினை பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

அதேவேளை உயிரிழந்த கால்நடைகளில் பல கால்நடைகள் பதிவில்லாத நிலையில் காணப்படுகின்றது. 

எனவே உயிரிழந்த கால்நடைகளின் பண்ணையாளர்கள், உயிரிழந்த கால்நடைகளின் பதிவிலக்கம் மற்றும் ஏனைய தரவுகளை உடனடியாக அந்தந்த மாவட்ட கால்நடைகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு வழங்கினால் அவர்களுக்குரிய நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க இலகுவாக இருக்கும்.

 கடந்த 30 வருட காலபகுதிக்குள், முதல் தடவையாக குளிர் தாக்கத்தினால் மாடுகள் இறந்துள்ளன. 

 90வீதமான மாடுகளின் உடம்பில் குளிர் தாங்க கூடிய அளவிற்கு கொழுப்பு படைகள் இல்லை.

 கொழுப்பு படை இல்லாமைக்கு முக்கியமான காரணம் கால்நடைகளுக்கு இந்த காலப்பகுதியில் பெரும்போக காலப் பகுதியில் போதுமான தீவனங்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

இதன் காரணமாக உடம்பில் கொழுப்பு படைகள் இல்லாத மாடுகள், இந்த குளிர் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளன. என தெரிவித்தார்

No comments