வெளியே பேச்சு:உள்ளே குழிபறிப்பு!



உள்ளுராட்சி தேர்தலை கூட்டாக இணைந்து எதிர்கொள்ள தமிழ் கட்சிகளிடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு முளையிலேயே முயற்சி கிள்ளியெறியப்பட்டுள்ளது.

இதனிடையே கூட்டமைப்பின் வசமுள்ள பருத்தித்துறை நகரசபைக்கான புதிய தவிசாளர் தெரிவு பங்காளிக்கட்சிகளது குத்துவெட்டுக்களினால் கோரமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி அன்று பருத்தித்துறை நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட வேளை ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி மீண்டும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை சிறிது நேரம் முன்னதாக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தவிசாளர் யோ. இருதயராஜா தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

தவிசாளர் இன்மை காரணமாக வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில், இன்று வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறுவதற்கான கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை நகரசபையில் எட்டு பேர் கூட்டம் ஒன்று நடத்துவதற்கு சமூகம் அளிக்க வேண்டும். ஆனால் ஏழு பேர் மட்டுமே சமூகமளித்திருந்த நிலையில் ஒரு கோரம் இன்மையால் புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்படுவதாக வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

புதிய தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறி கூட்டத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

இன்றைய தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஆறு பேரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவருமாக எட்டு பேர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments