நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளானவர் உயிரிழப்பு!


நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன், மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மல்லாவியிலிருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நோயாளர் காவு வண்டியின் சமிக்கைகளை அவதானிக்காது, மோட்டார் சைக்கிள் ஓட்டி சடுதியாக வீதியை கடக்க முற்பட்டுள்ளமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்தனர். 

குறித்த விபத்தில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பார ஊர்திகள் சங்க முகாமையாளராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments