வடக்கிற்கு உரம் வழங்கும் ஜநா

 


ஐக்கிய நாடுகளின் மத்திய அவசர நிவாரண நிதியத்தின் (UN-CERF) ஊடாகக் கொள்முதல் செய்யப்பட்ட 780.1 மெற்றிக் தொன் யூரியாவை, ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் (FAO)நேற்று விவசாய அமைச்சிடம் கையளித்தது.

வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களில் அரை ஏக்கருக்குக் குறைவான சிறிய காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா 50 கிலோ வீதம் இந்த யூரியா உரம் பகிர்ந்தளிக்கப்படும். விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த உரத்தின் விநியோகம் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவியுடன் இவ்வாரத்தில் ஆரம்பமாகும்.

அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில், மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சமீபத்திய பொருளாதார நெருக்கடி, உர வகைகளுக்கான பற்றாக்குறை என்பவற்றிலிருந்து மீட்சிபெற உதவுவதே மேற்கொள்ளும் இந்த முன் முயற்சியின் நோக்கமாகும்.

யூரியா உரத்தைக் கையளிக்கும் வைபவத்தில் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கையில் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் அமைச்சு காட்டும் ஆழ்ந்த அக்கறையை வலியுறுத்தியதுடன், FAO வழங்கும் உதவிக்கு தனது நன்றியை தெரிவித்தார். ‘அவசியமான விவசாய உள்ளீடுகள் நெற் செய்கையாளர்களுக்குக் கிடைக்குமாயின் நாட்டின் உணவுப் பாதுகாப்பை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வரமுடியும்.

மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்களும் ஏனைய உள்ளீடுகளும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய முறையில் ஒத்துழைப்பதற்காக, FAO அமைப்புக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

‘பொருளாதார நெருக்கடியின் மோசமான தாக்கங்களிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பல்துறை உதவிகளை வழங்கி வருகின்றது. 3.4 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட மனிதநேய தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் திட்டத்தின் மூலமான உதவிகளும் இதில் உள்ளடங்குகின்றன.


No comments