நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

இன்று 27/11/2022 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் Royal Oak Intermediate School Hall இல் மாலை 5.30 மணியளவில்

பெருந்திரளான தமிழீழ மற்றும் தமிழக மக்கள் முன்னிலையில் மிக எழுச்சியாக ஆரம்பமானது.

நிகழ்வின் முதல்கட்டமாக பொதுச்சுடரானது  நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் அவர்களால் ஏற்றப்பட்டது.  நியூசிலாந்து தேசிய கொடி, தமிழ் தேசிய ஆதரவாளர் மேர்வின் அவர்களால் ஏற்றப்பட்டது.

தமிழீழ தேசிய கொடியினை நியூசிலாந்து கடற்கரும்புலி லெப்.கேணல் இலக்கியா அவர்களின் தாயார் அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழீழ கொடியேற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சரியாக 6.05 மணிக்கு மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒருபகுதி ஒலிபரப்பப்பட்டது.

பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடரனது மேஜர் சிவா அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, தமிழீழ மற்றும் தமிழக மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதை வேர்களாகிய மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நியூஸிலாந்திலே இருக்கக்கூடிய பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாதிரி கல்லறை சுமார் முப்பத்தைந்து அமைக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் சகோதரர்களினால் உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவம் தாங்கிய புகைப்படத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.

தொடர்ந்து "கல்லறை மேனியரே கண் திறப்பார்கள்....."பாடலுக்கு சாருஜா  அவர்களின் நடனம் இடம்பெற்றது. அடுத்து தமிழோசை  அவர்களின் தமிழீழ கவிதை அவரின் மழலை மொழியில் உரைக்கப்பட்டது.

தொடர்ந்து " சாவினை தோல் மீது தாங்கிய......" பாடலினை தீபன் அவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக பாடினார். 

தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வாளர் திரு.குருபரன் அவர்களினால் சிறப்புரை வழங்கப்பட்டது.  முதல் வித்தாகிய சங்கர் அண்ணாவின் வரலாறு உள்ளடங்களாக எமது காவல் தெய்வங்களான மாவீரர்கள் மற்றும் எமது தேசிய தலைவரின் தியாகங்கள் பற்றியும் அவர்களின் அளப்பரிய பெருமைகள் பற்றியும் அவரது சிறப்புரை அமைந்திருந்தது.

பின்னர் ஆரணி  அவர்களினால் " தாயக மண்ணே தாயக மண்ணே......" பாடலுக்கு எழுச்சி நடனம் இடம்பெற்றது. பின்னர் துவாரகா  மற்றும் குருபரன் சிவராமன் அவர்களால் கவிதை உணர்வு பூர்வமாக உரைக்கப்பட்டது. தொடர்ந்து கேசிகா மற்றும் தேஸ்மிகா அவர்களினால் எம் மண்ணின் மாவீரருக்கு பாடல் படிக்கப்பட்டது. பின்னர் Pakuranga தமி்ழ் பாடசாலை மாணவர்களின்  "மாவீரர்களின் கதை" என்ற தொனிப்பொருளில் கவிதை தொகுப்பு  இடம்பெற்றது.

பின்னர் நிகழ்வின் இறுதியாக  நியூசிலாந்து தேசிய கொடியினை தமிழ் தேசிய ஆதரவாளர் மேர்வின் அவர்கள் இறக்கிவைத்தார்.

தமிழீழ தேசிய கொடியினை நியூசிலாந்து கடற்கரும்புலி லெப்.கேணல் இலக்கியா அவர்களின் தாயார் இறக்கிவைத்தார்.

இத்துடன் தமிழர்களின் புனிதனாளாம் தமிழீழ மாவீரர் நாளானது அதிகமான நியூசிலாந்தில் வாழும் தமிழீழ மற்றும் தமிழக மக்கள் சாட்சியாக தமிழ்த் தேசியம் நோக்கிய பாதையில் ஒரு படிக்கட்டென " நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்......." எழுச்சி பாடலுடன்  இனிதே நிறைவுற்றது.

No comments