கூட்டத்திற்கு வர மறந்த பங்காளிகள்!

தன்னிச்சையாக சுமந்திரன் கூட்டிய கூட்டம் பிசுபிசுத்துள்ளது.ஏற்கனவே ரணிலுடன் தனித்து நெருக்கத்தை டெலோ உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக்கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் மாத்திரமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தார்.

எனினும் இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் மாத்திரம் பங்கேற்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதனையடுத்து அனைத்து தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பை நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

குறுகிய கால அறிவிப்பு காரணமாகவே தாம் நேற்றைய சந்திப்பில் பங்கேற்க முடியவில்லை என்று தமிழ்த்தேசியக்கட்சிகளின் தலைவர்கள் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments