சாமிற்கு நற்சான்றிதழ்!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமர் பதவிக்கு என்னுடைய பெயரை 11 கட்சிகளின் தலைவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். சகல எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கினால் அதாவது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சகல எதிர்க்கட்சிகளும் ஒரு அணியில் இருந்தால் நான் இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தேன். 

எனினும் எனக்குத் தோல்வி ஏற்பட்டது. இலக்கங்களில் எனக்கு தோல்வி கிடைத்தது என்பது உண்மை. ஆனால் எனது அரசியல் வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் அடைவதற்கான ஒரு நிகழ்வும் அந்த ஜனாதிபதி வாக்கெடுப்பின் போது இருந்தது. ஜூலை இருபதாம் திகதி ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னர் 19ஆம் திகதி இரவு 11:30 மணியளவில் நானும் பீரிஸிம் டிலானும் சஜித் பிரேமதாசவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் அதன் தலைவர் சம்பந்தனின் இல்லத்துக்கு சென்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். அப்போது சம்பந்தன் கூறிய விடயம் மிகவும் முக்கியமானது. இரண்டு விடயங்களுக்காக டலஸிக்கு வாக்களிப்பதாக சம்பந்தன் கூறினார்.

 அதாவது டலஸ் இனவாதி அல்ல. இரண்டாவது டலஸ் ஊழல்வாதி அல்ல. இந்த இரண்டு விடயங்களுக்காக நாம் அவரை ஆதரிக்கின்றோம் என சம்பந்தன் கூறினார். அது எனது அரசியல் வரலாற்றில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு அங்கீகாரம். ஜனாதிபதி பதவியை விட சம்பந்தன் போன்ற ஒரு தலைவர் அவ்வாறு கூறியது எனக்கு மிக பெறுமதியானது. ஜனாதிபதி பதவியை பணத்துக்கு கூட எடுக்கலாம். அது நடந்திருக்கிறது. ஆனால் சம்பந்தன் கூறிய இந்த விடயத்தை பணத்தால் பெற முடியாது என டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

No comments