முல்லை நீதிமன்றில் புதிய வழக்குகள்!

முல்லைத்தீவு குருத்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இயூறு ஏற்படுத்தியதாக வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா இரவிகரன் கந்தையா சிவநேசன் உட்பட மூவருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி,‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியினை பௌத்தபிக்குகள் முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா இரவிகரன்,கந்தையா சிவநேசன், சமூகஆர்வலர் ஜூட்நிக்சன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்திரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தே நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இலங்கை காவல்துறையினர் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்


No comments