கோதபாயவை விரட்டியவர்களை ரணில் கலைத்துவிட்டார்! பொய்யர்களுக்கான பொலிகிறாப் கூட்டமைப்புக்கு தெரியாதா? பனங்காட்டான்


உணவுக் கப்பல்களை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க சீனாவினதும் பாகிஸ்தானினதும் உளவுக்கப்பல்கள் இலங்கைக்குள் நுழைகின்றன. கோதபாய நாடோடியாக அலைய அவரை கலைத்தவர்களை ரணில் துரத்திவிட்டார். ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை இலகுவாகக் கண்டுபிடிக்க பொலிகிறாப் கருவி இருப்பது கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரியாதா?

இலங்கையின் கடந்த நான்குமாதகால போராட்டம் மக்கள் வயிற்றுடன் சம்பந்தப்பட்டது. கமத்தொழில், கடற்றொழில் ஆகியவற்றுக்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருள் இன்மையால் இது ஆரம்பமானது. 

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் மக்கள் உணவுக் கப்பலை எதிர்பார்க்க, அதற்கு மாறாக உளவுக் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்கின்றன. சீனாவின் ஷயுவான் வாங் - 5| உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை மாத்தளைத் துறைமுகத்துக்குள் புக அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனாவினால் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் தைமூர் 12ம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்குள் புகுந்துள்ளது. 

இந்து சமுத்திர வல்லரசாகத் திகழும் இந்தியாவுக்கு இது சிம்மசொப்பனமாக மாறியுள்ளது. இலங்கையின் உயிர் மூச்சு இந்தியாவே என்று மோடிக்கு ரணில் மகுடம் சூட்டிய ஒரு வாரத்துக்குள் சீன- பாகிஸ்தான் உளவுக்கப்பல்கள் அங்கு செல்வது யாரை அச்சுறுத்த? இலங்கைக்கு இது புரியாவிட்டாலும் இந்தியாவுக்கு நன்கு தெரியும். 

இந்தியாவையும் சீனாவையும் இடமும் வலமுமாக வைத்து - இரண்டு பெண்டாட்டிகளுடன் குடும்பம் நடத்தலாமென நினைக்கும் இலங்கை இப்போது இரண்டுக்கும் நடுவில் நெருக்குப்படுகிறது. சிலவேளைகளில் இதுவே ரணிலுக்கு தீராத வலியாக அமையலாம். 

இவ்வாறான பிரச்சனைகளுக்கு வித்திட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் காலிமுக கோதாகமவில் 123 நாளில் முறிக்கப்பட்டுவிட்டது. மார்ச் மாதம் 31ம் திகதி மிரிகானவில் உள்ள கோதபாயவின் தனிப்பட்ட இல்லத்தின் முன்னால் ஆரம்பித்த இப்போராட்டம் மே 9, யூன் 9, யூலை 9 ஆகிய திகதிகளில் முறையே மகிந்த, பசில், கோதபாய என்னும் ராஜபக்ச குடும்ப வல்லாதிக்கர்களை வெளியேற்றியது. 

அதேபாணியில் ஆகஸ்ட் 9ல் ரணிலையும் வீட்டுக்கு அனுப்பலாமென கோதாகமவினர் முன்னெடுத்த முயற்சி பிசுபிசுத்துப்போய் படுதோல்வி கண்டது. கூடாரங்களோடு களத்திலிருந்து அகன்றுவிட்டனர் போராட்டக்காரர்கள். இது ரணிலின் 45 வருட அரசியல் அனுபவம் என்னும் சாணக்கியத்துக்குக் கிடைத்த முக்கிய வெற்றி என சர்வதேசம் பார்க்கிறது.

அதேசமயம், கோதபாய ராஜபக்ச தமது மனைவியுடன் நாடோடியாக அலைந்து திரிந்து வருவதற்கும் ரணிலின் சாமர்த்திய அரசியல் காய்நகர்த்தலே காரணமாயிற்று. ஆனால் இதனை இப்போது எவரும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். 

முதல் மூன்று இரவுகளை மாலைதீவில் கழித்த கோதபாய தம்பதியர், அடுத்த 30 நாட்கள் சிங்கப்பூரில் தங்கிவிட்டு, அடுத்த 90 நாட்களுக்கு தாய்லாந்தில் தஞ்சம் பெற்றுள்ளனர். அவர் படும்பாடு அவருக்குத்தான் தெரியும். 

ராணுவ வீரனாக, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் யுத்த நாயகனாக, பாதுகாப்புச் செயலாளராக, 69 லட்சம் சிங்கள மக்களின் அபிமானம் பெற்று ஜனாதிபதியாகிய கோதபாயவுக்கு, நிம்மதியாகத் தங்கிட நிரந்தரமாக ஒரு நாடு இல்லை. இதனை அவரோ அவரது உடன்பிறப்புகளோ கனவிலும் எண்ணியிருக்க மாட்டார்கள். 

சிங்கள அரச பயங்கரவாதத்தால் அகதிகளாக்கப்பட்ட பத்து லட்சம் வரையான தமிழர் ஏதோ ஒரு புகலிட நாட்டில் உரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கோதபாய நிரந்தரமாகத் தஞ்சம் புக ஒரு நாடும் இல்லை. தமிழர்கள் அகதிகளாக வாழும் எந்தவொரு புகலிட நாட்டையும் அவர் ஒருபோதும் தமக்கான பாதுகாப்புத் தளமாக எண்ணவும் மாட்டார். 

இந்த நிலையில், அவர் மீண்டும் இலங்கை வருவார், அரசியல் தலைமை யை ஏற்பார், இதோ அடுத்த மாதம் வருகிறார் என்று அவரின் தாசர்கள் தங்கள் வசதிக்காக அறிவித்துவர, அவரோ நாடு திரும்பும் மனநிலையில் இல்லை. கோதபாய நியமித்த சிறைக்குற்றவாளியான ஞானசாரதேரர் குழு கையளித்த ஒரு நாடு ஒரு சட்டம் அறிக்கையை ரணில் நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழர்கள் மீது எப்போதும் இனவெறி கக்கி வந்த தேரர், தமது இந்த அறிக்கையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு சிபாரிசு செய்திருந்தார்.

இந்த சிபார்சு தம்மை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளும் வஞ்சக நோக்கத்தோடு செய்யப்பட்டதென்பதை நன்கு அறிந்துவிட்டார் ரணில். தற்போது கோதபாய ஜனாதிபதியாக இருந்தால் இவ்வாறான சிபார்சை ஞானசாரதேரர் செய்திருப்பாரா என எழுப்பப்படும் கேள்வி நியாயமானது. இதுவே, ஞானசாரதேரரின் அறிக்கையை ரணில் குப்பையில் வீச எடுக்கும் முடிவுக்கு காரணம்.

காலிமுகத் திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்குள் திடீரென தலையைப் புகுத்தி ஆகஸ்ட் 9 போராட்டத்தை வழிப்படுத்துபவர் தாமே என முன்னாள் ராணுவத்தளபதியும், தற்போதைய பிரேமதாச அணியின் எம்.பியுமான சரத் பொன்சேகா அறிவித்து வந்தார்.

இந்தப் போராட்டத்தின் வெற்றியினூடாக தனது எதிர்கால அரசியல் இலக்கை (ஜனாதிபதி பதவி) அடைய இவர் போட்ட திட்டம் தவிடுபொடியாகி விட்டது. இதனால் மீண்டும் பீல்ட் மார்~ல் பட்டத்தை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

முள்ளிவாய்க்கால் யுத்த வெற்றிக்கு உரிமை கோரிய கோதபாயவும், சரத் பொன்சேகாவும் அவர்களது சிங்கள மக்களாலேயே இன்று நிராகரிக்கப்பட்டு விட்டனர் என்பது இப்போது வரலாற்றுப் பதிவாகிவிட்டது. தமிழினத்தின் மீது இனஅழிப்பு மேற்கொண்ட இரண்டு யுத்த நாயகர்களுக்கும் அவர்களது சிங்கள மக்களே தண்டனை கொடுத்துவிட்டனர். 

இந்நிகழ்ச்சிகளுக்கு ஊடாக ரணில் சர்வகட்சி ஆட்சி அமைப்பு தொடர்கதையாகி வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக இதில் இணையாது என சொல்லப்படுகிறது. அதேசமயம் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் இது தொடர்பான மாற்றுக் கருத்தொன்றை பகிரங்கமாக அறிவித்துள்ளார். நிபந்தனைகளின் அடிப்படையில் ரணிலின் சர்வகட்சி ஆட்சிக்கு கூட்டமைப்பு தயாராக உள்ளது என்பதே இவரது அறிவிப்பு. இதுவே இதுவரை வெளியான கூட்டமைப்பு தரப்பின் அறிவிப்புகளில் கடைசியானது. 

இதனைப் பார்க்கும்போது கூட்டமைப்பின் தலைமையுடனும் பேச்சாளருடனும் இடறுப்பட்டுக் கொண்டிருக்கும் பங்காளியான ரெலோ, ஏதோவொரு முடிவுக்கு வந்துவிட்டது போலவே தோற்றம் தெரிகிறது. 

தமிழரசைத் தவிர்த்து வேறு நான்கு தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து ரெலோ ஜெனிவாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தமையையும், கூட்டமைப்புக்குள் சில கறுப்பு ஆடுகள் உள்ளன என ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாணக் கூட்டமொன்றில் பகிரங்கமாக அறிவித்ததையும் நோக்கின், இதன் ஆழ அகலம் புரியும். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் சிலர் தமக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூட்டமைப்பினுடனான சந்திப்பில் ரணில் அறிவித்ததால் உருவான புயல் ஓய்வதற்கு முன்னர் ரெலோவின் தனிப்போக்கு மேலும் சந்தேகக் கேள்விகளை உருவாக்கியுள்ளது. ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்த கூட்டமைப்பின் எம்.பிக்கள் யார்? கிழக்கிலும் வடக்கிலும் இவர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தனித்தனியாக கூட்டமைப்பின் பத்து எம்.பிக்களிடமும் விளக்கம் கேட்க கூட்டபை;பு முன்வந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியற்ற இரண்டு வாக்குகளில் ஒன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடையது என்ற தகவல் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் உலா வருகிறது. இது அவரது இயலாமையின் காரணமாக இருக்கலாமெனவும் கூறுகிறார்கள்.

கூட்டமைப்பில் யார் யார் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதை இலகுவாகக் கண்டுபிடிக்க ஒரு வழியுண்டு. பொலிகிறாப் (Polygraph) என்பது பொய் சொல்பவர்களைக் கண்டுபிடிக்கும்(Lies Detector)  கருவி. சர்வதேச ரீதியாக இதனையே உளவு நிறுவனங்கள்,  புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தி பொய் சொல்பவர்களை கண்டுபிடித்து வருகின்றன. இது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குத் தெரியாததல்ல. 

ஆனால், இதனை பயன்படுத்தி பொய்யர்களைக் கண்டுபிடிக்க கூட்டமைப்புத் தலைமை முன்வராது. தற்செயலாக பொய்யர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது? கட்சியை விட்டு வெளியேற்ற முடியுமா? இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்கள் ரணில் பக்கம் தாவ வழிவகுப்பதா? கூட்டமைப்பின் எதிர்காலம் என்னாகும்? இவைகள்தான் கூட்டமைப்பின் முன்னாலுள்ள பெரும் கேள்விகள்.

No comments