கோத்தபாய சகபாடி தப்பிக்க தடை!அகதியாக அலைந்து திரியும் கோத்தபாயவின் சகபாடியான ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, வெளிநாடு செல்ல முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று  நிராகரித்தது.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமானங்கள் நான்கை மீள திருத்தும்போதும் இடம்பெற்ற 7 பில்லியன் ரூபா மோசடிகள் குறித்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, வெளிநாடு செல்ல முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம்  நிராகரித்தது.


இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணை, கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, துபாய் செல்ல முன்வைத்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.


உதயங்க வீரதுங்க நீதிமன்றில் ஆஜரான நிலையில், அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன மன்றில் முன்னிலையாகி வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்துமாறும், அவர் வகிக்கும் அரச பணி நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாகவும் கோரினார்.


எனினும் இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த விசாரணையாளரான சிஐடியின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் வீரசிங்க, குறித்த கோரிக்கைக்கு கடும் ஆட்சேபனம் வெளியிட்டார்.


உதயங்க வீரதுங்க இதுவரை விசாரணைகளுக்கு முழுமையான வாக்கு மூலம் ஒன்றை வழங்கவில்லை என இதன்போது வெளிப்படுத்திய அவர், ஆவணங்கள் இன்றி வாக்குமூலம் வழங்க முடியாது என அவர் கூறி அதனை நிராகரித்து வரும் பின்னணியில் அவர் வெளிநாடு செல்வது விசாரணைகளை பாதிக்கும் என கூறினார்.


அத்துடன் 2015 முதல் இடம்பெற்ற விசாரணைகளில் அவரைக் கைது செய்யவிருந்த சிரமம் தொடர்பிலும் நீதிமன்றுக்கு தெளிவுபடுத்திய விசாரணை அதிகாரி, அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டார்.


அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் திலின கமகே, சிஐடியினர் எதிர்ப்பு வெளியிடுவதால் வெளிநாடு செல்ல அனுமதியளிக்க முடியாது எனக் கூறி, உதயங்க வீரதுங்கவின் கோரிக்கையை நிராகரித்தார். அத்துடன் இவ்விசாரணைகளுக்கு முழுமையான வாக்குமூலம் ஒன்றை வழங்க எதிர்வரும் 17 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

No comments