40ஆயிரம் பேர் பட்டினியால் சேலைனுடன்!




இலங்கையில் உண்பதற்கு போதிய உணவு இல்லாமல் 40,000 பேர் வைத்தியசாலைகளில் சேலைனை பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தற்போதைய நிலையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

நல்லாட்சி அரசாங்மானது நாட்டை ஒப்படைக்கும்போது பாணின் விலை 55 ரூபாயாகக் காணப்பட்டது.

தற்போது பாணின் விலை 200 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.

430 ரூபாயாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

1,500 ரூபாயாகக் காணப்படட ஒரு மூடை உரம் 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 340 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு அனைத்துப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

உணவு பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள நாடுகளில் எமது நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஜூன் மாதம் 57.9 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கமானது ஜூலை மாதம் 66.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக உண்பதற்கு உணவு இல்லாமல் 40,000 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சேலைனை பெற்றக்கொள்கின்றனர்.

வைத்தியத்துறையை எடுத்துக்கொண்டால் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


மருத்துவ கட்டமைப்பானது பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரிப்பு என இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியாது விபசாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடந்த 2019ஆம் ஆண்டு மக்கள் எடுத்த தவறான தீர்மானம் காரணமாக பாரிய பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது.

No comments