கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் பிரச்சினை தீர்க்கப்படும்!கச்சதீவு எங்கிருக்கின்றது என்பதை இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியும் இந்தியாவில் உள்ளவர்களுக்கும் தெரியும். கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம் என திராவிட முன்னேற்ற கழக தொழிற்சங்க தலைவரும் சட்டத்தரணியுமான கரூர் எம்.கண்ணதாசன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு மீனவர்கள் பிரச்சினைகளை தொடராமல் செய்வதற்கான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்காக தனியான ஒரு அமைச்சரை தமிழக அரசாங்கம் நியமித்திருக்கின்றது. எப்பொழுதெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றதோ அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. கடந்த ஓராண்டுகளாக எங்களது ஆட்சி வந்ததிலிருந்து பல்வேறு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் உதவி செய்திருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி மீனவர்கள் பிரச்சினை தீர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றார். எனவே நீண்ட நாட்களாக தொடரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினையில் இரண்டு நாடுகளும் சேர்ந்து விரைவில் முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்.

வரலாற்று ரீதியாக நாங்கள் பார்ப்போமானால் கச்சதீவு எங்கிருக்கின்றது என்பதை இங்கு உள்ளவர்களுக்கும் தெரியும் அங்கு உள்ளவர்களுக்கும் தெரியும். கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம். அதனால் சட்டமன்றத்தில் கச்சதீவு மீட்க வேண்டுமென தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் எனக் கூறியிருக்கின்றோம். அதனை மீட்டெடுப்பதன் மூலம் மீனவர் பிரச்சினை தீரும் என்ற அடிப்படையில் மீண்டும் கச்சதீவை எங்களுக்கு தர வேண்டும் என கேட்டு இருக்கின்றோம்.

No comments