நிகழ்ச்சி நிரல் இல்லாதவர்கள் ஜனாதிபதி, பிரதமர் நியமிக்கப்பட்டால் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவேன் - அனுரகுமார


எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி வேட்புமனுவை திரும்பிப்பெறத் தயார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்துக்கு வர ஒப்புக்கொண்டாலும், இப்போது அவர்களின் நிலைப்பாடு மாறிவிட்டது என்றார்.

எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஒரு ஜனாதிபதியையும் பிரதமரையும் நியமித்து குறுகிய காலத்திற்கு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி தேர்தலுக்கு செல்வோம் என்று நாங்கள் அவர்களிடம் முன்மொழிந்தோம். 

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மேற்பார்வையிட அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களை உள்ளடக்கிய ஒரு சபையை நியமிக்கவும் நாங்கள் முன்மொழிந்தோம், ”என்று அவர் கூறினார்.

அவ்வாறான உடன்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியை தாங்கள் முற்றாக கைவிடவில்லை எனத் தெரிவித்த அவர், அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்பட்டால் இறுதி நேரத்திலும் வேட்புமனுவை வாபஸ் பெறத் தயார் எனவும் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முயற்சித்து வருவதாகவும் அவரது நகர்வுகள் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments