மக்கள் எழுச்சிப் போராட்டம் எங்கே செல்கிறது?மக்கள் எழுச்சி போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜேவிபியின் பிளவுண்ட அணிகள் ஒருங்கிணைவதாக விக்டர் ஜவன் தெரிவித்துள்ளார்.

முன்னாள்  முக்கியஸ்தரான அவரது கருத்து பகிர்வில் ஒரு பெரிய எழுச்சியை அடுத்தடுத்து இன்னுமொரு பெரிய மக்கள் எழுச்சி உருவாக முடியாது என்றே நான் நம்பியிருந்தேன். ஆனால், எனது நம்பிக்கையை பொய்யாக்கி, ஜூலை 9 அன்று பழைய எழுச்சியை விட பல மடங்கு பெரியதாக ஒரு மக்கள் எழுச்சி பொங்கி எழுந்தது. இந்த எழுச்சி தொடர்பாக எனக்கு இன்னொரு அவதானமும் இருந்தது. ஏற்கனவே அது குறித்து நான் இணையத்தில் பதிவிட்டுள்ளேன். அதாவது, அரசியலமைப்பு சட்ட வரம்புகளை மீறிக்கொண்டு ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக எடுக்கப்படும் பகீரதப் பிரயத்தனங்கள், நாட்டில் உள்ள சிக்கலான நெருக்கடியை மேலும் மோசமாக்கும். அந்தப் பெருமுயற்சியானது தற்போது விழுந்திருக்கும் பாதாளத்தில் இருந்து வெளியே வருவதற்குப் பதிலாக மிகவும் கடினமான நெருக்கடிகளோடு இரண்டாவது பாதாளத்திற்குள் நாட்டைத் தள்ள வழிவகுக்கும். எவ்வாறாயினும் ஜுலை 9 பொங்கி எழுந்த மக்கள் எழுச்சி எனது இரண்டாவது அவதானிப்பை பொய்யாக்கவில்லை.

ஜூலை 9ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற நிராயுதபாணியான இளைஞர் எழுச்சியை ஜே.வி.பி யின் பாணியில் எழுந்த மூன்றாவது எழுச்சியாக கருதலாம். அதன் முதல் கட்டத்தை 1971 இல் காணக் கிடைத்தது. அது பெரும்பாலும் சுயமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு எழுச்சிப் போராட்டமாகும். ஆனால் அந்தப் போராட்டம் பாதுகாப்பு படையினரால் விரைவாக தோற்கடிக்கப்பட்டது. பின்னர் அதன் இரண்டாவது கட்டம் 1986ஃ89 இல் நடந்தேறியது. 71 இல் இடம்பெற்ற முதல் கிளர்ச்சியை விட இது ஒரு சக்திவாய்ந்த கிளர்ச்சியாக கருதப்பட முடியும். அந்தக் கிளர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது. அதில் அதிகமான உயிர்ச்சேதங்கள் மற்றும் உடைமைகள் அழிந்தன. அது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு நெருங்கிய ஒரு நிலைக்கு வந்ததன் பின்னர்  பாதுகாப்புப் படையினரால் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது. 

2022 ஜூலை 09 ஆம் திகதி அமைதிப் புரட்சி வடிவில் இடம்பெற்ற மூன்றாவது எழுச்சியானது நாடு கண்ட பிரமாண்டமான மக்கள் எழுச்சிப் போராட்டமாகவே கருத முடியும். ஆனால் அது மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியை விடவும் பல மடங்கு பெரிய அளவில் மதிக்கத்தக்கதாக இருந்தது. நாட்டின் ராணுவ பலத்தை மிகைத்த வண்ணம் வெற்றிவாகை சூடியுள்ள இந்த எழச்சி சொல்ல வரும் செய்தி என்னவெனில், மக்கள் அதிகாரத்தின் மேலாதிக்கத்தை விட நீண்ட நெடுங்காலமாக சீர்கெட்டு சிதைந்து போயுள்ள அரசின் இயலாமையையும் பலவீனத்தையும் உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும்.

துற்போதைய இந்த இக்கட்டான நெருக்கடியில் நடுநிலையோடு இயங்க வேண்டிய நிறுவனங்கள் பக்கச்சார்போடு செயற்படுவதானது அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. கோட்டாபய ராஜபக்ச போன்ற கடும் குற்றச்சாட்டுகள் நிறைந்த ஒரு நபரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதித்ததே அரச நிருவாகத்தின் வீழ்ச்சியை காட்டுகிறது. அந்த நபரை பதவியில் இருந்து நீக்கிய விதமும் அரசியல் அமைப்பில் எந்த அளவுக்கு ஊழல் நிறைந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

மக்கள் எழுச்சியில் காணப்பட்ட சில உண்மைகள்

முதலாவது மற்றும் இரண்டாவது கிளர்ச்சியை ஜேவிபியின் தூய கிளர்ச்சிகளாகக் கருதலாம். ஆனால் அமைதியாகவும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் கருதப்படும் மூன்றாவது மக்கள் எழுச்சியை ஒரு ஜே.வி.பி. யின் தனித்துவமான கிளர்ச்சியாக கருத முடியாது. அது பெரிய அளவில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஏராளமான சுயேட்சை இளைஞர் குழுக்களின் அர்ப்ணங்களோடு எழுந்த போதிலும், கடைசி நேரத்தில் பெரட்டுகாமி கட்சியினர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி பெரும்பாலும் அந்த எழுச்சியை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டனர். 

ஜே.வி.பியின் அரசியல் கருவரையில் பிறந்த முன்னிலை சோசலிசக் கட்சியானது (பெரட்டுகாமி) தாய் கட்சியுடன் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது. ஜே.வி.பியில் இருந்து பிரிந்து தனது சொந்தக் கட்சியை உருவாக்கியது முதல் அந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் போட்டி மனப்பாங்கு நிலவி வந்தாலும் கூட ஜூலை எழுச்சி வரை முன்னணியில் இருந்த வந்தது ஜே.வி.பி. கட்சியாகும். ஆனால் ஜூலை எழுச்சியின் மூலம் ஜே.வி.பியை மிஞ்சிய அரசியல் பலத்தையும் மேலாதிக்கத்தையும் பெரட்டுகாமியால் வெளிப்படுத்த முடிந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்களும்; உருவாகலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

பெரட்டுகாமி கட்சியின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கருதப்படும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு கிளர்ச்சிக்கான போராளிக் குழுக்களை தயார்படுத்துவதில் ஆற்றிய பணி பெரட்டுகாமியின் பலத்தை காட்டுவதில் பெரும் தாக்கம் செலுத்தியது எனலாம்.

இந்த இரண்டு கட்சிகளிலும் ஜே.வி.பி யினர் கடுமையான மார்க்சியக் கட்டமைப்பிலிருந்து வெகுவாக விலகி சமூக ஜனநாயக அணுகுமுறையை நோக்கி நகர்ந்த ஒரு கட்சியாகவே கருத முடியும். ஆனால் பெரட்டுகாமி கட்சியானது மிகவும் கடுமையான மார்க்சியக் கட்டமைப்பில் செயல்பட்டாலும், இனம், சாதி, மதப் பிரச்சினையில் அந்தக் கட்சி வைத்திருக்கும் கருத்துகள் நவீனமானது, முற்போக்கானது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஜே.வி.பி யினரின் இரண்டு கிளர்ச்சிகளும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. ஆனாலும் ஜூலை எழுச்சியின் பிரதான நோக்கம் ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேற்றுவது என்பதால் அதற்கு அமைவாகவே பெரட்டுகாமி கட்சி செயற்பட வேண்டியதாயிற்று. எனவே அரச அதிகாரத்தை அபகரிப்பதை விட அரசியல் அதிகாரத்தின் அடையாளங்களாக காணப்படும் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய மூன்று முக்கிய கட்டிடங்களை ஆக்கிரமிக்கும் கொள்கையில் அவர்களால் முன்னேர முடிந்தது.

எவ்வாறாயினும், பெரட்டுகாமியின் தலைவர் குமார் குணரட்னம் அவர்கள் தமது  கருத்துக்களை பாராளுமன்றம் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என   உரத்த குரலில் கூறி வருகின்றார்.

9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியை வைத்து பெரட்டுகாமி கட்சிக்கு மக்கள் பலம் இருக்கின்றது என்பதற்கான அறிகுறியாக அதனை கருத முடியாவிட்டாலும், இன்றைய அரசியல் ஆடுகளத்தில் அக்கட்சி தவிர்க்கமுடியாத ஒரு பங்காளி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேசிய மட்ட அரசியல் குழுவொன்றை நியமிப்பதில் ஜே.வி.பி யிடமிருந்து எதிர்ப்பு வந்தாலும், பெரட்டுகாமி கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் அசரியல் யாப்பு வகுக்கப்படுவது அவசியமாகும். அக்கட்சியுடன் சம்பந்தமில்லத ஏனைய எழுச்சியுடன் தொடர்புடைய இளைஞர் குழுக்களுக்கும் பொருத்தமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு அதில் இடமிருக்க வேண்டும்.

இறுதி முடிவு என்னவாக இருக்கும்? 

'ஒரு நாள் மக்கள் புரட்சி' ஆனது நாட்டுக்கு என்ன விளைவை தந்தது? இலங்கையின் முழு அரசியல் அமைப்பையும் ஆட்கொண்டிருந்த ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் என்ற கொடூரமான புற்று நோயை அது நீக்கியது என்றே சொல்லலாம். எனினும் அதன் காரணமாக மாத்திரம் நாடு வளமாகி, செழிப்பாகி விடாது என்ற உண்மையை நாம் மனங்கொள்ள வேண்டும்.

அரசியல் மட்டத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை கொள்ளையடிப்பது என்பது ராஜபக்சாக்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றாக கருத முடியாது. 78 ஆட்சி முறையின் கீழ் ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் இந்தத் தவறை இழைத்துள்ளனர் என்றல் அது பிழையல்ல. ஆனால் ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்த சொத்துக்களின் அளவு அதிகம் என்பதும் மட்டுமே இங்கு வித்தியாசமாகும். உண்மை என்ன வென்றால் அரச உயர் அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் அரசியல்வாதிகளால் மட்டும் சொத்துக்களை கொள்ளையடிக்க முடியாது. அரசியல் கட்டமைப்பு மட்டுமல்ல, அதிகாரிகள் கட்டமைப்பும் ஊழல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. 

நாட்டின் வங்கரோத்து நிலையில் தாக்கம் செலுத்தும் வெளிநாட்டுக் கடனின் அளவு 50 பில்லியன் டாலர்கள் ஆகும். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் போர்களால் ஏற்பட்ட அழிவின் மதிப்பளவு 200 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் திவால்நிலைக்கு ஊழல் மட்டும் காரணமல்ல என்பதை இது காட்டுகிறது.

நாட்டின் தலைவர்களுக்கு இன, மத, ஜாதி பேதங்கள் காரணமாக வன்முறை மோதல்கள் ஏற்படாத வகையில் முகாமைத்துவம் செய்யும் திறன் இருந்திருந்தால்;, நாட்டின் பொருளாதாரத்தில் மேலதிகமாக 200 பில்லியன் டாலர்கள் சேமித்துக் கொடுத்திருக்கலாம்.

அரச சேவை ஊழியர்களை பொருத்தமட்டில் ஏழு லட்சம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் பதினைந்து லட்சம் பேருக்கும் அதிகமான தொகையினர் உள்ளனர். விமான சேவை, மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்றன நஷ்டத்தில் இயங்கும் சில அரச நிறுவனங்களும்; இலங்கையின் திவால்நிலைக்கு முக்கிய காரணிகளாகும்.

கட்டமைப்பு சீர்திருத்தங்களே தற்போதைய நிலையில் நாட்டிற்கு தேவையான முக்கய பணியாகும். அரசாங்கம், சமூக-அரசியல் அமைப்பு, கல்வி அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார ஒழுங்கு யாவுமே மிகவும் சீரழிந்த நிலையில் உள்ளது. எனவே அதனைத்து துறைகளிலும் வியாபதித்து காணப்படும் சீர்கேட்டை சரிசெய்து அவற்றை சுத்தமாகவும், திறமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான மறுசீரமைப்பு திட்டங்களே இன்றைய தேவையாகும்.

சீர்திருத்தங்கள் என்ற விடயத்தை இலங்கையின் அரசாங்கம் மற்றும் நிர்வாக சேவை கட்டமைப்பும் புரிந்து கொள்வதில்லை. அவற்றை தொடுவதற்கு வெறுக்கும் தலைப்பாகவே அவர்கள் கருதுகின்றனர். இந்த உண்மையை மக்கள் எழுச்சிப் போராளிகளிடமிருந்தும் கற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை.  

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் இருப்பில் அக்கறையுள்ள அனைவரும் உணர வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவெனில், இலங்கை இப்போது ஒரு பயங்கரமான படுகுழியில் விழுந்துள்ளது. நாம் புத்திசாலித்தனமாகவும் விவேகமாகவும் செயல்படத் தவறினால், இன்னும் மோசமான அதலபாதாளத்தில் விழும் வாய்ப்பு உள்ளது. நாம் தற்போது இருப்பதை விட அது படுபயங்கரமானது. அதிலிருந்து வெளியேறுவதும் எளிதல்ல. அந்த அதலபாதாளத்தில் விழுந்தால் சுமார் பத்தாண்டுகள் 19ஆம் நூற்றாண்டில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பம். அதேவேளை, இலங்கை தேசமானது ஞானமும் விவேகமும் மற்றும் முதிர்ச்சியுள்ள தலைவர்களும்; இல்லாத ஒரு நாடு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முன்னேறுவதா அல்லது இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வதா என்பது அடுத்த சில நாட்களில் முடிவு செய்யப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையை  கருத்திற் கொண்டு நாட்டின் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பேராசை, சுயநலம், கோஷ்டி வெறிகளை புறந்தள்ளிவிட்டு சமாதானமாகி, இணங்கி வாழ்வதற்கும் ஒன்றிணைந்து அமைதிகாத்து பயணிப்பதற்கும் ஓரளவுக்காவது அறிவுக்கு வேலை கொடுத்து செயற்படுவதற்கும் முன் வர வேண்டாமா?

No comments