ஆஸ்ரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 41 பேர்


சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (18) காலை அவுஸ்திரேலியாவின் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 41 பேரும் முல்லைத்தீவு, சிலாபம், நீர்கொழும்பு, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்  6 பேர் 16 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள், இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

பின்னர் இவர்கள் நேற்று இரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மாலன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 37 பேரை சரீரப் பிணையில் விடுதலை செய்யவும் குறித்த கடல் பயணத்தை நேரடியாக ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் நால்வரை சிறையில் தடுத்து வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 30 பேருக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தலையீட்டில்,  தற்காலிக சுற்றுலா விமான பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், 11 பேருக்கு அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.

No comments