இராணுவ இருப்பை பேண முயற்சி!



அரச படைகளுக்கான நிதிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களை நியாயப்படுத்துவதற்காக அப்பாவி முன்னாள் போராளிகளை இலக்கு வைப்பது முறையற்ற செயலாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமாகிய என்.நகுலேஸ்  மட்டக்களப்பில் சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டு ஜனநாயக ரீதியில் அரசியற் கட்சியாகளை உருவாக்கி தமிழ் மக்களுக்கான அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற நிலை இன்று வரை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. முன்னாள் போராளிகள் விசாரணை என்ற பெயரில் அழைக்கப்படுவதும், அவர்களின் முகநூல் பதிவுகள், சமூக வளைதள பதிவுகளை வைத்து அவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதுமான செயற்பாடுகள் இந்த நாட்டில் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதே அடிப்படையில் இன்றைய தினம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவராகிய என்னை சி.ஐ.டி யினர் இன்றைய தினம் தங்கள் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பில் வருகை தருமாரு கூறி சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

எனது வரலாறு தொடங்கி எமது கட்சியின் செயற்பாடுகள் வரை பல விடயங்கள் தொடர்பிலும் என்னிடம் விளக்கம் கோரப்பட்டன. என்ன விசாரணை, எதற்கான விசாரணை என்று கூட அறியத்தராமல் தொலைபேசி மூலம் வருகை தருமாறு கூறி இன்றைய விசாரணை இடம்பெற்றிருந்தது.

இந்த நாட்டில் 2009 உடன் யுத்தம் மௌனிக்கப்பட்;டது என்று மார்தட்டும் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் முன்னாள் போராளிகளையும், அவர்களது ஜனநாயக ரீதியான அரசியல் நடவடிக்கைகளையும் குறிவைத்து பல தடைகளை இட்டு வருகின்றது. திடீர் விசாரணைகள், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பனவற்றின் மூலம் கைது எனப் பலதரப்பட்ட செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

அதிலும் எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மீது இந்த அரசாங்கத்தின் குறி பலமாக வைக்கப்பட்டுள்ளதனை பல செயற்பாடுகள் மூலம் உணரக் கூடியதாக இருக்கின்றது. கடந்த வருடம் எமது கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளார் முகநூல் பதிவொன்றிற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாத காலங்களுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று எனக்கான விசாரணை. இவ்வாறு இந்த அரசாங்கம் பேராளிகளை மீண்டும் மீண்டும் குறி வைப்பது ஏன்?

யுத்தம் மௌனித்தாலும் தங்கள் அரசாங்கத்தின் அரச படைகளுக்கான நிதிகளை அதிகரித்துக் கொள்வதற்கான அல்லது அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களை நியாயப்படுத்தவதற்காக அப்பாவி முன்னாள் போராளிகளை இலக்கு வைப்பது முறையற்ற செயலாகும். யுத்தத்தின் வடுக்களை இன்னும் சுமந்து கொண்டிருக்கும் போராளிகளை மேலும் மேலும் துன்பப்படுத்துவதை இந்த அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்

No comments