ஆள்பிடியில் ரணில்: பரபரப்பானது கொழும்பு!

இலங்கையின் பிரதமர் ரணில் தனக்கான ஆதவாளர்களை தேடி வேட்டையாட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதுடன், அது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

நேற்று முன்தினம் அவர்களை சந்தித்து ரணில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்கள் பாராளுமன்றத்தில் ரணில் அணியாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது. 

ரணில் அணியில் ஐ.ம.சக்தியின் 25 உறுப்பினர்கள் அடங்குகின்றனர். அதில்,  11 சிரேஸ்ட உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஹரின் பெர்னாண்டோவுடன் நெருக்கமான தரப்பொன்றும், கபீர் ஹசீம், அசோக அபேசிங்க, தலதா அதுகோரல உள்ளிட்ட சிலருடன் இவ்வாறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்,  சுதந்திர கட்சி தலைமையிலான சுயாதீன அணியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்காது என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (13) காலை கூடவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சியின் பாராளுமன்றக் குழுவுடன் மேலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (14) காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வெளியேறியதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்


No comments