யாழ்.பல்கலையில் கவனயீர்ப்பு!



நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.


நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கை செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில், எமது நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகளைக் கண்டித்தும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் 28.04.2022 வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.


அந்த வகையில் எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் 2022 ஏப்ரல் 28ம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருக்கின்றது என்பதனை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.


பாதுகாப்பு பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல கல்விசாரா பணியாளர்களையும் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 28.04.2022 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு வவுனியா பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய அனைத்து பணியாளர்களையும் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும், தொடர்ந்து இடம்பெறும் விளக்கப் பொதுக் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதோடு, வவுனியா பல்கலைக்கழக பணியாளர்களை பம்பைமடு வளாகத்தில் ஒன்றுகூடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


 

No comments