நிதியும் நீதியுமில்லா ஆட்சியில் பொய்யும் புரட்டுமே உச்சம்! பனங்காட்டான்


ஜெனிவாவின் தற்போதைய அமர்வில் உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக பகிரங்கமாகக் கூறி

மகிழ்வுறும் அமைச்சர் பீரிஸ், அந்த 31 நாடுகளில் 9 மட்டுமே மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் தகுதிபெற்ற உறுப்பு நாடுகள் என்பதை மறைத்து உண்மைக்குப் புறம்பாக பொய்யுரைப்பது அவர்களுக்கு வாக்களித்த அப்பாவி மக்களை ஏமாற்றும் மோசடி. 46:1 தீர்மான நிறைவேற்றலிலும் இப்படித்தான் விசித்திரமான அரசியல் கணக்கொன்றை கட்டவிழ்த்து விட்டு தங்கள் முதுகை தாங்களே தடவிக்கொண்டது கோதபாய அரசு. 

ஒரு தசாப்தத்துக்கும் மேலாக ஜெனிவாவை அலைத்தும் ஏமாற்றியும் வரும் இலங்கைக்கு இப்போது ஜெனிவா ஜென்மகண்டமாக மாறிவருகிறது. 

எனினும் அவர்களின் உள்மனசு - மனச்சாட்சி போர்க்கால உண்மைகளை ஏற்றுக் கொள்வதால் ஜெனிவாத் தீர்மானங்களை ஏற்று அவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரம், பொருட்கள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, அளவுக்கு மீறிய கடன், வங்குரோத்து நிலைமை என்பவை முள்ளிவாய்க்காலிலிருந்தே ஆரம்பமானவை என்பதை இவர்கள் உணராதவரை நாடு மீட்சி பெறமுடியாது என்பதே யதார்த்தம். 

நாட்டின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான நிதி கல்வித்துறைக்கு ஒதுக்குவது ஒரு காலத்தில் இருந்தது. தமிழ் மக்களின் நியாயமான விடுதலை வேட்கையை நசுக்கவென படைபலத்தை அதிகரித்ததால் கூடுதலான நிதியை காலக்கிரமத்தில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கும் நிலை அரசாங்கங்களுக்கு உருவாகியது. 

இதில் ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, இன்றைய பொதுஜன பெரமுன ஆகியோரும், அவ்வப்போது இவர்களுக்கு ஆதரவளித்த இடதுசாரிகள் ஆகியோரும் இந்த நிலைமைக்கான பங்காளிகள். இங்கிருந்துதான் அரச பயங்கரவாதம் ஆரம்பமாகியது என்பது தனி வரலாறு. இதுவே இப்போது ஜெனிவா விவகாரமாகியுள்ளது. 

இன்றைய இலங்கை அரசாட்சியில் வெளிப்படையாக ராஜபக்ச குடும்பத்தினர் எண்மர் முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்களாக உள்ளனர். இவர்களுள் நால்வர் சகோதரர்கள். மிகுதி நால்வரும் இவர்களின் அடுத்த தலைமுறையினர். இந்தக் குடும்பங்களின் எண்ணுக்கணக்கற்றவர்கள் அரச நிர்வாகத்தில் மூடுபனியாக இயங்குகின்றனர். ராஜபக்சக்களுக்கு இணைவாக கோதபாயவின் படைத்துறை சகபாடிகள் நாற்பதுக்கும் அதிகமான தலைமைப் பதவிகளை அலங்கரிக்கின்றனர். 

இந்த அசாதாரண நிர்வாக கட்டமைப்பையே மனித உரிமைகள் ஆணையாளர் தவறாது தமது அறிக்கைகளில் சுட்டி வருகிறார். ஜனநாயகம் என்ற பெயரில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற கட்டமைப்பில், ராணுவ ஆட்சி எவ்வாறு நகர்த்தப்படுகிறது என்பதை தமது பதவிக்குரிய ராஜரீக சொல்லாடல்களால் ஆணையாளர் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. 

ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளும பகிரங்கப் பக்குவத்துக்கு இலங்கை இன்னும் வரவில்லை. இனியும் வரும்போல் இல்லை. 

மைத்திரி - ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30:1 பொறுப்புக்கூறல் தீர்மானத்தை, தாம் ஜனாதிபதியானதும் முதற்பணியாக ரத்துச் செய்தார் கோதபாய. கடந்த வருட மார்ச் மாத 46வது அமர்வில் ஜெனிவா புதிதாக நிறைவேற்றிய 46:1 தீர்மானத்தையும் இந்த மாத அமர்வில் நிராகரித்துள்ளது கோதபாய அரசு. 

தங்களின் அனுமதியின்றி நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஷசண்டியன்| பாணியில் பேரவை அமர்வில் கூறிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தத் தீர்மானம் செல்லுபடியற்றதாகி விட்டதாக நினைத்திருக்கக்கூடும். 30:1 தீர்மானம் எவ்வாறு இன்னமும் ஜெனிவா பதிவில் இருக்கிறதோ, அவ்வாறே 46:1 தீர்மானமும், இனி வரப்போகின்ற தீர்மானங்களுக்கு ஆதார பலமாக இருக்குமென்பது அமைச்சர் பீரிஸிற்கு தெரியாதிருக்க முடியாது. 

ஜெனிவாவில் 30:1 தீர்மானம் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டதென்பதையும், 46:1 தீர்மானம் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதென்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். 46:1 தீர்மானத்துக்கு பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்ததால் 11 மேலதிக வாக்குகளால் இது நிறைவேறியது. 14 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. வாக்களிப்பில் பங்குபற்றிய நாடுகளிலிருந்துதான் வெற்றி தோல்வி கணிக்கப்படுகிறது. ஆனால் இலங்கை அரசு அப்போது புதிய அரசியல் கணக்கொன்றை எடுத்துக்கூறி - அதாவது 47 நாடுகளில் 22 மட்டுமே தீர்மானத்தை ஆதரித்தன என்றும் மிகுதி 25 நாடுகள் ஆதரிக்கவில்லையென்றும் தெரிவித்து பித்தலாட்டம் போட்டது. 

போர்க்கால அனர்த்தங்களுக்கு பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய இலங்கை பலமுறை தவறிவிட்டது என்று இந்த மாத அமர்வில் எடுத்துக் கூறிய ஆணையாளர் பச்சிலற் அம்மையார், இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச வழக்குகள் தொடரப்பட வேண்டுமென்று விடுத்த அழைப்பானது இலங்கை அரசு சற்றும் எதிர்பார்த்திராதது. 

இதனுடன் நிறுத்தாது, இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்ந்துள்ளதென விளித்ததுடன், போர்க்கால ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை ஆணையாளர் வெளிப்படுத்தியபோதே தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட்சித்தரப்பினருக்கு ஏற்பட்டது. 

இதற்கு முக்கிய காரணம் போர்க்கால நாயகர்களாக சிங்கள தேசம் ஆராதிப்பவர்களே இன்றைய ஆட்சியாளர்களாக இருப்பது. அவ்வேளை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர் பதவிகளை வகித்தவர்கள் இன்றைய ஜனாதிபதியும் பிரதமருமே. இவர்களின் பணிப்பில் வன்னிக் களத்தை தாங்களே சமராடி வென்றதாகக் கூறிய கமால் குணரட்ணவும், சவேந்திர சில்வாவும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் ராணுவ தளபதியும். இந்தக் கூட்டத்தின் முன்னும் பின்னும், இடமும் வலமுமாக போரை முன்னெடுத்த படைத்தரப்பினர் உள்ளனர். 

இந்தப் பின்னணியில் பார்க்கின், போர்க்கால பொறுப்புக்கூறல் - சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை - ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கை எனப்படும் ஜெனிவாவின் அனைத்துச் செயற்பாடுகளும் தங்களைக் குறி வைக்கும் சர்வதேசப் பொறி என்பதை இவர்கள் நன்குணர்கின்றனர். 

ஒருபுறத்தே ஜெனிவாவை நிராகரித்தவாறு மறுபுறத்தில் சர்வதேசத்தை அமைதிப்படுத்தும் வகையில் சில முன்னெடுப்புகளை கோதபாய ஆரம்பித்துள்ளார். 'அனைத்துத் தரப்பினரையும் அணைத்துக் கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்" என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் காட்டும் ஒரு முயற்சியே இது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவிகளிலிருந்து வெளியேற்றியதால் உருவாகி வரும் புதிய அரசியல் நெருக்கடியையும் தீர்ப்பதற்கு ஒரு கல்லில் இரண்டு காய்களாக எடுக்கப்படும் நடவடிக்கையாகவும் இதனைப் பார்க்க முடிகிறது. 

தமது அரசின் பங்காளிக் கட்சியாக இருந்தவாறு குடைச்சல் கொடுக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரை அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் கோதபாய சந்தித்து உரையாடினார். 

பல தடவைகள் அறிவிக்கப்பட்டு பின்போடப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை இந்த மாதம் 15ம் திகதி சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார் கோதபாய. அத்துடன், முதற்தடவையாக சர்வகட்சி மாநாடு ஒன்றை அவர் நடத்தவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அகில உலகுக்கான கண்துடைப்பு நாடகங்களாகவும், சமகால அரசியல்போக்கை தங்களுக்கு ஸ்திரமாக்க அவர் எடுக்கும நடவடிக்கைகளாகவும் பார்க்கலாம். 

மூன்று மாதங்களாக நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாத நிதி அமைச்சராக இருப்பவர் பசில் ராஜபக்ச. நாட்டை மீட்பவர் என்ற அறைகூவலுடன் நிதி அமைச்சராக்கப்பட்ட இவரது காலமே இலங்கையை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. ஷதட்டுப்பாடு| என்பதையே அரசின் நவீன சுலோகமாக மாற்றியுள்ளவர் இவர். மின்சக்தியின்மையால் தினமும் ஏழு மணிநேர வெட்டு. நாட்டின் சகல வீதி விளக்குகளையும் இரவு வேளைகளில் இம்மாத இறுதிவரை அணைத்து வைக்குமாறு உத்தரவு. 367 வெளிநாட்டுப் பொருட்களுக்கு இறக்குமதித் தடை. 2500 வரையான கொள்கலன்கள் டாலர் இன்மையால் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. 

நாடுகளிடம் கடன் பெறுவது இவர்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டது. அதனால் உலகுக்கே இன்று கடனாளியாகிவிட்டது நாடு. இவ்வாறான பெருமைகளின் சொந்தக்காரரான நிதி அமைச்சர் பசிலை - ஊத்தை அமெரிக்கன் என்று சாடியுள்ளார் பதவி பறிக்கப்பட்ட உதய கம்மன்பில. 

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு தீர்வில்லை. அடுக்கடுக்கான ஆணைக்குழுக்களே வந்துபோயின. இனியும் குழுக்கள் அமைக்கப்படப் போவதாக செய்திகள் கசிய விடப்படுகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காது அரைகுறை திருத்தத்துடன் சமாளிப்பதற்கு முயற்சி. பயங்கரவாதச் சட்டத்தை முழுமையாக நீக்கக்கோரி நாடு தழுவிய கையெழுத்துப் போராட்டத்தை சுமந்திரன் மேற்கொண்டுள்ளார். யானையின் மீது இலையான் அமர்வது போன்ற முயற்சி இது. முன்னைய நல்லாட்சிக் காலத்தில் இலகுவாகச் செய்திருக்க பயங்கரவாத் தடைச்சட்ட நீக்கத்தை, நண்பர்களை பகைக்கக்கூடாதென வாழாவிருந்த தமிழரசுக் கட்சியினர் இப்போது அதற்கு முயற்சிக்கின்றனர் என்று கருத்து வெளியிட்டுள்ளார் சி.வி.விக்னேஸ்வரன். 


மொத்தத்தில் நிதியும் நீதியுமற்ற வங்குரோத்து ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, ஜெனிவாவுக்கு இலங்கைக் குழுத்தலைவராகச் சென்ற அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமது வழமையான சோடனைக் கதைகளை உலாவவிட்டு, ஜெனிவாவை தோற்கடித்த மகாநாயகன் என தம்மைக் காட்டிக்கொள்ள முயல்கிறார். இவரது கூற்றை நம்பும் கோதபாயவும் அவர் சொல்வதை மேற்கோள் காட்டி தமது அறியாமையை வெளிப்படுத்துகிறார்.


தற்போதைய 49வது ஜெனிவா அமர்வின்போது இலங்கை விவகாரத்தில் உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றின என்பதுவே அமைச்சர் பீரிஸ் கூறும் கதை. 


ஜெனிவா பொதுச்சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில் 47 நாடுகளே மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பு நாடுகள். இவை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இடம்பெறுபவை. 


அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்ட 31 நாடுகளில் 9 நாடுகள் மட்டுமே மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பு நாடுகள். மிகுதி 22 நாடுகளும் பேரவையில் உரையாற்ற முடியுமே தவிர வாக்களிக்கும் தகுதியற்றவை. 


பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் இந்த 9 நாடுகள் சிறுதொகையினர். அமைச்சர் பீரிஸ் கூறுவதுபோல பெரும்பான்மை ஆதரவு இங்கு இலங்கைக்கு இல்லை. இந்த வருட செப்டம்பர் மாத 51வது அமர்வில், அடுத்த கட்ட தீர்மானத்துக்கு ஜெனிவா செல்கையில் தாம் எங்கே உள்ளோம் என்பதை இலங்கை புரிந்துகொள்ள இன்னமும் ஐந்து மாதங்களே உள்ளன. 


அதற்கு முன்னராக, தப்பான எண்ணுக் கணக்குகளை பொய்யும் புரட்டும் கலந்து வெளியிடுவதன் மூலம் தங்களுக்கு வாக்களித்த அப்பாவி மக்களையே இவர்களால் ஏமாற்ற முடியும். சர்வதேசத்தை அல்ல! 

No comments