மே18 இல் யாரை நினைவு கூர்ந்தீர்கள்!! பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைப்பு!

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் கடந்த மே 18 இல் அவருடைய வீட்டில் யாரை நினைவேந்தல் செய்தீர்கள் என்ற பெயர்

விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியொருவரிடமே பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் விபரம் கோரப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் அவருக்கு வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை சம்மந்தமாக 2021.05.18 ஆம் திகதி இனப்படுகொலை தினத்தை நினைவூட்டும் முகமாக அத்தினத்தில் விளக்கு வைத்து இறந்தவர்களுக்கு சமர்பணம் செய்த காரணத்திற்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்கிய போது தனது குடும்ப அங்கத்தவர்களும், நெருங்கிய உறவினர்களும் யுத்தத்தின் மூலம் இறந்து விட்ட காரணத்தினத்திற்காகவே நான் இந்த தினத்திற்கு விளக்கேற்றி அஞ்சலி அவர்களுக்கு சமர்பணம் செய்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்து அவ் வாக்கு மூலத்தின் போது யுத்தத்தில் இறந்த குடும்பத்தினரதும், உறவினர்களினதும் விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கையளிப்பேன் எனவும் கூறியிருந்தீர்கள்.

ஆகையால் அப் பெயர் பட்டியலை 2022.02.22 ஆம் திகதிக்கு முன்பதாக வவுனியா வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு இறந்து போனவர்களின் முழு விபரங்களையும் கையளிக்குமாறு தகவல் தருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மே 18 ஆம் திகதி குறித்த முன்னாள் அரசியல் கைதி தனது வீட்டில் இறந்தவர்கள் நினைவாக நீதிமன்ற கட்டளைகளை மீறாத வகையில் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments