மாவீரர் நினைவேந்தல் காட்டும் புகலிடத் தமிழர்களின் பலமும் தாயக தலைமைகளின் பிளவும்! பனங்காட்டான்


புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பல பிரிவுகளாக இருப்பதாக தாயகத் தலைமைகள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதனைப் பொய்யாக்கி பாரிய தேசிய எழுச்சியாக புலம்பெயர் உறவுகள் மாவீரர் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து தங்கள் ஒற்றுமையைப் புலப்படுத்தினர். புலம்பெயர் உறவுகளை குறைகூறும் தமிழ்த் தலைமைகள் ஆகக்குறைந்தது நினைவேந்தல்கள் போன்ற தேசியக் கடமைகளுக்காகவாவது எப்போது ஒரே அணியில் இணையப் போகின்றனர். 

சிரித்திரன் என்ற பெயரில் இலங்கையில் வெளிவந்த சஞ்சிகை மிகவும் பிரசித்தமானது. அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகளை கேலிச்சித்திரமாகவும் கட்டுரைகளாகவும் தமிழில் வெளியிட்ட முதலாவது நகைச்சுவை இதழ் இது. 

இதன் ஆசிரியராக சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்பட்ட சிவஞானசுந்தரம் கட்டிட வரைகலைஞராக இருந்தபோதும், கருத்தோவியக் கலைஞராக மிளிர்ந்து சமூகத்தின் சீர்கேடுகளை வெளிக்கொணர்ந்தார். வாழும்போதே மாமனிதர் மகுடம் சூட்டப்பட்டு மதிப்பளிக்கப்பட்ட இவரின் கருத்தோவியம் ஒன்றின் வாசகம் பின்வருமாறு இருந்தது:

'கேள்வி - தூங்கிக் கிடக்கும் தமிழனை தட்டி எழுப்புவது யார்? பதில் - மெயில் ரெயில் அநுராதபுரத்தை அடையும்போது சிங்களவன்". 

மெயில் ரெயில் என்பது இரவு நேரத்தில் யாழ்ப்பாணம் - கொழும்புச் சேவையில் ஈடுபடுவது. இதில் பயணிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் முழு ஆசனத்திலும் தூங்கி விடுவர். அவ்வளவுதான். இதனை புரிந்து கொள்ள நேரமெடுக்காது. 

இப்போது தூங்கிக் கொண்டிருக்கும் தமிழரை சிங்கள ஆட்சியாளர்களே அடிக்கடி எழுப்பி விடுகிறார்கள். இதனை கோதபாய ஆட்சி மறவாது அவ்வப்போது செய்து வருகிறது. 

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் உறைநிலைக்குச் சென்றபின்னர், தமிழரைத் தூங்கவிடாது மே 17, கறுப்பு யூலை, தியாகி திலீபன் நினைவுநாள், மாவீரர் நாள் போன்ற முக்கிய தினங்களில் சிங்கள தேசம் செயற்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்திலுள்ள காவற்துறையினரும் நீதிமன்றங்களும் இந்த நாட்களில் நினைவேந்தல்களைக் குழப்புவதற்கான முழுநேரப் பணியாளர்களாக அரச சம்பளத்தில் இயங்குகின்றனர். 

இந்த நாட்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே தமிழ்த் தேசிய அரசியலாளர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு தடை விதிக்கப்படுகிறது. இது தவிர, மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்த இடங்கள், நினைவுத் தூபிகளிருந்த இடங்கள் முட்கம்பிகளால் சுற்றிவளைக்கப்பட்டு படையினரால் துப்பாக்கி சகிதம் காவல் புரியப்படுகிறது. 

அதனையும் மீறி ஏற்றப்படும் நினைவுத் தீபங்களை காலால் உதைத்து மிதிப்பது, வணக்க மலர்களை அள்ளி வீசுவது, முன்னின்று செயற்படுபவர்களை கைது செய்வது போன்ற அத்துமீறல்களை காவற்துறையினர் மேற்கொள்கின்றனர். 

இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்ப்புகளையும் தடைகளையும் உடைத்து நினைவேந்தல்களை நிறைவேற்ற வேண்டுமென்ற மன உந்துதலும், ஓர்மமும் தமிழ் உணர்வாளர்களிடம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்து மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான வேலன் சுவாமிகள், சுகாஸ், காண்டீபன், பீற்றர் இளஞ்செழியன் போன்ற பெயர் குறிப்பிடக்கூடிய சிலர் பொது இடங்களிலும் தூபிகள் அமைந்த இடங்களிலும் அதீத துணிச்சலுடன் நினைவேந்தலை மேற்கொண்டமையை ஊடகங்கள் வாயிலாக காண முடிந்தது, 

சில இடங்களில் படையினரின் ஆயுதங்களின் முனையில் நினைவேந்தல் இடம்பெற்றது. இவ்விடங்களில் ஆண்களும் பெண்களும் காட்டிய துணிச்சல் வியக்க வைப்பது. முதலாவது மாவீரர் சங்கரின் இல்லத்துக்கு மாவீரர் பண்டிதரின் தாயாரை அழைத்துச் சென்ற சிவாஜிலிங்கம், அங்கு தீபமேற்றிய வரலாற்று நிகழ்வு சர்வதேச ரீதியாக பதிவு பெற்றுள்ளது. 

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரனும், கலையரசனும் தங்கள் வீடுகளில் தீபமேற்றி நினைவேந்தலை நிறைவு செய்தனர். நாம் வாழும் இடங்களில் இறந்தவர்களை இதயங்களில் நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம் என்ற தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை தமிழரசு எம்.பி.க்கள் அப்படியே நிறைவேற்றியுள்ளனர். மாவை சேனாதிராஜாவும், கட்சியின் துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கூட தங்கள் வீடுகளிலேயே தீபமேற்றினர். 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பிலுள்ள தமது இல்லத்தில் தீபமேற்றி சற்று வித்தியாசமாக நினைவேந்தலை ஒப்பேற்றினார். மன்னாரிலும் மட்டக்களப்பிலும் சற்று அடக்கமான நிலையில் நினைவேந்தல் இடம்பெற்றது. முன்னைய ஆண்டுகளைப் போன்று இவ்வருடம் கத்தோலிக்க குருமார்களின் பங்களிப்பு காணப்படவில்லை. நவம்பர் 20ம் திகதியை இறந்தோருக்கான பொதுவழிபாட்டு நாளாக அவர்கள் பிரகடனம் செய்ததால் உருவான கருத்து முரண்பாடு காரணமோ தெரியாது. 

போரில் உயிர்நீத்த உறவினர்களை நினைவுகூருவதை அரசாங்கம் தொடர்ந்து நிறுத்தினால் பொதுமக்கள் மேலும் வீறுகொண்டு எழுவர் என்று அறைகூவிய ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அவரது சகாக்களும் அன்று காணாமற் போய்விட்டனர். தூதுவர்களைச் சந்திப்பதில் இப்போது இவர்களுக்கு நேரம் போகிறது. 

தமிழரசுக் கட்சியின் இரட்டையர்களென இந்நாட்களில் அடையாளம் காட்டிவரும் சுமந்திரனும் சாணக்கியனும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியாவுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்ததால் மாவீரர் நாளை மறந்துவிட்டனர். விரும்பியிருந்தால் வெளிநாடுகளில் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களின் அறைக்குள்ளாவது தீபமேற்றி, அவைகளை ஊடகங்களில் பதிவேற்றி புதுமை செய்திருக்கலாம். கனடாவில் கிடைத்த நிரந்தரமாக நினைவில் இடம்பெறும் வரவேற்பு, மாவீரர் நாளை மறக்கடிக்கச் செய்துவிட்டது போலும்.

இவை போகட்டும். கூட்டமைப்பின் தலைவரும், திருமலை மாவட்ட எம்.பியுமான சம்பந்தன் நினைவேந்தல் நாளன்று எங்கே போனார், என்ன செய்தார்? தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் இதுபற்றி வினவியபோது அவர் கூறிய பதில் பின்வருமாறு அமைந்தது:

'நாடாளுமன்ற வரவு செலவின் மீதான விவாதம் தற்போது இடம்பெறுவதால் ஐயா (சம்பந்தன்)  கொழும்பு வீட்டில்தான் தங்கியுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் என்ற பதவி காரணமாக ராஜபக்சவினர் ஐயாவுக்கு அரச பங்களா (பெரிய வீடு) ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளனர். பல உபாதைகளுடனும் முதுமை காரணமாகவும் கஸ்டப்படும் ஐயாவுக்கு இந்த வீட்டில் வாழ்வது வசதி. அரசாங்கம் கொடுத்த வீட்டில் எவ்வாறு தீபமேற்றி நினைவேந்தல் செய்ய முடியும்?" என்று அந்தப் பதில் அமைந்தது. 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தாலும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும்கூட கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்வரை அந்த வீட்டில் சம்பந்தன் தங்கலாம். எனவே, தி.மு.க தலைவர் பதவியில் கலைஞர் கருணாநிதி இருந்தது போன்று சம்பந்தனும் கூட்டமைப்பின் ஆயுட்கால தலைவராகவே இருப்பார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

அரசாங்கம் வழங்கிய வீட்டை பக்குவமாக காத்துவரும் சம்பந்தன், தமது சொந்த வீடு (தமிழரசுக் கட்சியின் சின்னம் வீடு) சீரழிந்து போவதை கண்டுகொள்ளவில்லையா? பங்காளிக் கட்சிகள் பிளவுண்டு பிரிந்து தனித்தனியாகச் செல்வதை தெரியாதிருக்கிறாரா? ஒருவரது தன்னிச்சையான போக்கால் கூட்டமைப்பு உடையுண்டு போவதை அறியாதுள்ளாரா?

ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரோடு இருக்கும் சித்தார்த்தனும்கூட வழமைபோல மாவீரர் நாளை மறந்துவிட்டார். ஆனால், அவரிடம் முக்கியமான பொறுப்பொன்றை மாவை சேனாதிராஜா வழங்கியுள்ளார். 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில் உரையாற்றும்போது பிரிந்து நிற்கும் தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் தகுதி சித்தார்த்தனுக்கே உண்டென்றும், அவரது தந்தையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் இவ்வாறான பணிகளை அக்காலத்தில் சிறப்பாக செய்தவரென்றும் கூறி, இப்போதுள்ள நிலையில் ஒற்றுமைப்படுத்தும் தலைமைப் பணியை சித்தார்த்தன் ஏற்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை நிராகரிக்காத சித்தார்த்தன், அனைத்துக் கட்சியினரும் இவ்விடயத்தில் பங்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து தமது பதிலுரையை நிகழ்த்தினார். 

ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தனை தலைமை தாங்குமாறு மாவை சேனாதிராஜா விடுத்த வேண்டுகோளை வரவேற்றுள்ள ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் தலைமையில் இயங்குவதற்கு மாவையர் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். 

சில மாதங்களுக்கு முன்னர் ரெலோ முன்னெடுத்த ஒற்றுமை முயற்சியில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜா, பின்னர் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதை சுட்டும் வகையில் சிலேடையாக அமைந்தது செல்வம் அடைக்கலநாதனின் கருத்து. 

மாவையரின் முயற்சி நிறைவேறுமோ இல்லையோ தமிழரசுக் கட்சிக்குள் இவ்விவகாரம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரில் தமிழரசுக் கட்சியினர் ஆறு பேர். புளொட்டில் சித்தார்த்தன் மட்டுமே. இப்படியிருக்கையில் தமிழரசின் தலைவராக இருக்கும் மாவையர் தலைமைப் பதவியை சித்தார்த்தனுக்கு வழங்குவதா? அப்படியானால் கூட்டமைப்பின் சம்பந்தனின் நிலைமை என்ன? அடுத்து தலைமைக் கதிரைக்கு எதிர்பார்த்திருக்கும் சுமந்திரனின் எதிர்காலம் என்ன? 

சில வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சிச் செவ்வியொன்றில் தமிழரசுக் கட்சி பிரமுகர் சி.வி.கே.சிவஞானம் மாவையர் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார் என்று கூறியது உண்மையா? அல்லது திட்டமிட்டு சில குழப்பங்களையும் பிரிவுகளையும் மாவையர் ஏற்படுத்துகிறாரா?

புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பல பிரிவுகளாக இருப்பதாக தாயகத் தலைமைகள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதனைப் பொய்யாக்கி பாரிய தேசிய எழுச்சியாக புலம்பெயர் உறவுகள் மாவீரர் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து தங்கள் ஒற்றுமையைப் புலப்படுத்தினர். புலம்பெயர் உறவுகளைக் குறைகூறும் தமிழ்த் தலைமைகள், ஆகக்குறைந்தது நினைவேந்தல்கள் போன்ற தேசியக் கடமைகளுக்காகவாவது பொதுநோக்கில் எப்போது இணையப் போகின்றனர்?

No comments