நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பயங்கரவாதச் சட்டமே முக்கியம்!!


பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தினாலும், இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுவதுடன், சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அமைய ஒரு சில மாற்றங்களை முன்னெடுக்க நாம் முயற்சித்தாலும், சர்வதேச சமூகம் முன்னுக்குப்பின் முரணான வகையில் செயற்படுகின்றனர் எனவும் கூறினார்.

கடந்த ஈராண்டு காலத்தில் முப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் அதன் காரணிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் ஆழமாக ஆராய்ந்து, இந்த விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற நபர்களிடம் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு, எமக்கு உதவும் சர்வதேச நாடுகளிடமும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு இந்த செயற்பாடுகளில் நடவடிக்கை எடுத்தோம்.

அதேபோல் இந்த விடயத்தில் சர்வதேச தரப்பு முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என ஒரு தரப்பும், சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என இன்னொரு தரப்பும் கூறுகின்றனர். ஆனால் இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மைகளையும், ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது என்றே கூற வேண்டும். 

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளதனாலேயே நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தைரியமாக கூற முடிகின்றது.  பாதுகாப்பு செயலாளராக இது எனது நிலைப்பாடாகும்.

அவ்வாறான நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது மாற்றங்களையோ, திருத்தங்களையோ முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச தரப்பு எமக்கு கூறுகின்ற வேளையில் அரசாங்கம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இது குறித்து ஆராயவும் இரண்டு ஆணைக்குழுக்களை நியமித்தது. இதில் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாக தொடர்புபட்ட நபர் என்ற ரீதியில் எனது பங்குபற்றளில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத விதத்தில் எவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது என்பதை நாம் ஆராய்ந்ததுடன், இது குறித்த அறிக்கையை மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தோம். 

அதேபோல் பாராளுமன்ற குழுவொன்றும் நியமிக்கப்பட்டு  பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இவ்விரு அறிக்கைகளின் பின்னர் நீதி அமைச்சு இந்த விடயங்களில் கவனம் செலுத்தி ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் காரணிகளை வெளிப்படுத்தும். பயங்கரவாத தடைச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை நீதி அமைச்சு முன்வைக்கும்.

இந்த விடயங்களில் சர்வதேச தரப்பினர் ஒரு காரணியை வெளிப்படுத்தி அறிக்கையொன்றை முன்வைக்கையில் அதற்கு நாம் பதில் தெரிவிக்க தயாராகும் வேளையில், அது குறித்த வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் உடனடியாக மற்றப்பக்கத்தில் வேறொரு அறிக்கைவை முன்வைத்து முற்றிலும் மாறுபட்ட காரணிகளை வலியுறுத்துகின்றனர். 

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை மீண்டும் அரச அதிகாரிகளாக மாற்றி இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆகவே இவ்வாறான நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலேயே நாம் செயற்பட்டுக்கொண்டுள்ளோம் என்றார். 

No comments