2022:நிச்சயம் கவிழும்?



2022 ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்க் கொண்டு தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார ஜயமஹ தெரிவித்தார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும், குறிப்பாக பெரும் போகத்தில் நெல் அறுவடையானது குறைந்தது 50% ஆக குறைவடையும்.

இதேவேளை உரப் பிரச்சினையின் விளைவாக காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க முடியாது. மக்களின் எதிர்ப்புகள் அரசாங்கங்களை கவிழ்க்கக்கூடும் என்பதை வரலாறு காட்டியுள்ளதால் அரசாங்கத்தை கவிழ்க்க தேர்தல் தேவையில்லை. அடுத்தாண்டு எழுச்சிக்கு தயாராகுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் வரலாற்றில் முதன் முறையாக நெல் வயல்களுக்கும், விளைநிலங்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நகைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் திருடப்படுவது தொடர்பில் பொதுமக்கள் அறிந்திருந்த போதிலும் தற்போது விளைநிலங்கள் உட்பட ஒவ்வொரு இடங்களிலும் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதாக பி ஹரிசன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் காய்கறிகள், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் முட்டை ஒன்று ரூ.50க்கு விற்கப்படும் என்றும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1,200-1,300 வரை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கிலோ நாட்டரிசி சுமார் ரூ.300 ஆக உயரும் அதேவேளையில் சம்பா, கீரி சம்பா ரூ.500க்கு குறைவாக கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

பொது மக்களால் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில், தற்போது விவசாயிகள் வேதனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஏற்ற இறக்கம் திருட்டுகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

No comments