வானூர்தி நிலையத் திறப்பு!! மோடி நாமல் சந்திப்பு!!


இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று (20)  திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் 100 பௌத்த மதகுருமார் அடங்கிய குழுவினர் இன்று இந்தியாவிற்கு பயணம் செய்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையின் முதல் பிரதியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பகவத்கீதை நூல் மொழிபெயர்ப்பு செய்து மீள் பதிப்பு செய்யப்பட்டது.

பகவத்கீதையின் பெருமையை இலங்கை வாழ் இந்துக்கள் மட்டுமல்லாது, சகல மதத்தவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த நூல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பகவத்கீதையில் அமைந்த சமஸ்கிருத சுலோகங்கள், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறியும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments