இலங்கை அரசும் கறுப்பு பட்டியலில்!ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கைகொடுத்த சீனாவே தற்போது அவர்களை கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. சீன அரசாங்கத்தினால் மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் ஊடாக சர்வதேசத்தினால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது சீனாவின் ஒத்துழைப்பு ராஜபக்ஷாக்களுக்கு கிடைக்கப் பெற்றது. அந்த ஒத்துழைப்பிற்கான நன்றியுணர்வை இப்போது அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கமைய நாட்டின் வெவ்வேறு முக்கிய இடங்களை சீனாவிற்கு வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் தரத்தில் குறைவான உரத்தினை கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற முன்னரே இவர்கள் கடன் அனுமதிப்பத்திரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய இந்த விவகாரத்தில் மறைமுக கொடுக்கல் வாங்கல் காணப்படுகின்றமை தெளிவாகிறது.

தரத்தில் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்படக் கூடாதெனத் தெரிவித்து பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளமையால் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

இதன் காரணமாக சீன அரசாங்கம் இந்த கடன் அனுமதி பத்திரம் வெளியிடப்பட்டுள்ள மக்களை வங்கியை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் சீனாவினால் அல்லது சர்வதேசத்தினால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. கைகொடுத்த சீனாவே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது என்றார்.


No comments