இலங்கை-இந்திய மீனவர்கள் மோதல் சதி:விழிப்பு தேவை!



 தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எதிராக செயற்பட்டவர்கள் இன்று மீனவர்களுக்காக போராடுவதாக வேஷம் போடுகின்றனரென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் இன்பம் குற்றஞ்சாட்டினார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பொன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை மடி தொழிலினால் மீன் வளங்கள் அழிக்கப்படுவதுடன் எமது தொழில்வளங்களும் நாசமாக்கப்படுகின்றது.

அண்மையில் வடமராட்சியில் மீனவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அது அவர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல.ஒட்டுமொத்த மீனவர்களுக்குமான பிரச்சினை.

மீனவர்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்காக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குரல் கொடுத்து வந்த நிலையில் அதனை அரசாங்கமும் அரசாங்க தரப்பினரும் குழப்புகின்ற வேலை செய்துவருகின்றனர்

மீனவர்களுடைய பிரச்சினை அரசியல் நோக்கத்துடன் கையாளப்படுகின்றது. இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் மோதலை ஏற்படுத்துவதற்காக ஒரு சிலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

அவர்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து அவர்களை பலிகடாவாக்குகின்ற செயற்பாடுகளுக்கு ஒரு சில கோடாரிக் காம்புகளும் துணை நிற்கின்றன.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எதிராக செயற்பட்டவர்கள் இன்று மீனவர்களுக்காக போராடுவதாக வேஷம் போடுகின்றனர்.அவர்களுடைய நோக்கம் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதா? இந்த பிரச்சினையை வைத்து குளிர்காய்வதா? என்கிற கேள்வி எழுகிறது.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை எமது மீனவ சங்கங்கள் சந்தித்தபொழுது இலங்கை கடற்றொழில் அமைச்சர் எதுவும் செய்யவில்லை என்றும் நாங்கள் இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் உரிய தரப்புகளுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் தூதர் அவர்களுக்கு தெரிவிததுள்ளார் என்றார்.

ஊடகசந்திப்பில் கலந்துகொண்ட ரட்ணசிங்கம் முரளீதரன் கருத்து தெரிவிக்கையில்,இதற்கு மேலதிகமாக தற்பொழுது கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.இந்த திட்டத்தின் போது கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் உள்ள உப்பு செறிவு என்பது மீண்டும் கடலில் கலக்கின்ற ஒரு அபாயநிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சூழல் காணப்படுகின்றது.கரைப் பகுதியில் மீன்களின் செறிவு குறைவாக இருக் காணப்படுவதுடன் கரைவலை தொழிலை மேற்கொள்வோருக்கு பாதிப்பாக அமையும். வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடலில் மீன் பிடிப்பதற்கான பாஸ் நடைமுறை வழங்குவதற்கான திட்டமொன்று தற்போது பரிசீலனையில் காணப்படுகிறது இது மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.

No comments