இந்தியாவிற்கு எதிராக அல்ல:எம்.ஏ.சுமந்திரன்!



தமிழரசின் ஒருபகுதியினரது கடற்போராட்டம் இந்தியாவினை சீண்டியுள்ள நிலையில் நாம்  நடாத்திய போராட்டம் இந்தியாவிற்கு  எதிரான போராட்டம் அல்ல. சிலர்  எமது போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரானதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். 

யாழில் இன்றைய நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்தை  முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியே நாங்கள் கடல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இந்த தடைசட்டம்  முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு  ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது. எனவே இந்த சட்டம் ஒழுங்கான முறையில் உள்ளது, நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்தினால்  இப்படியான அநாவசியமான இழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம். 

நாங்கள் நடத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு  எதிரான  போராட்டமென  சித்தரிப்பதற்கு பலர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்திய அரசாங்கமே 2016ஆம் ஆண்டு தடை செய்யப்படவேண்டிய தொழில்முறை என உத்தியோகபூர்வமாக கூட்டறிக்கையில் அறிவித்து இருக்கின்றது.

ஆகவே இது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடும் தான் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு என்று வேண்டுமென்றே ஒரு கதையினை உருவாக்கி இந்த மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில்  பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதை முற்றாக நிராகரிக்கின்றோம். இந்தத் தொழிலை யார் செய்தாலும்  தடுக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments