விக்கி, சுரேசை துரோகி என்று நான் கூறவில்லை - சிவாஜி


தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் காலங்களில் பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பற்றி சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்ததை நான் அவதானித்தேன். வல்வெட்டித்துறை நகரசபை கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஐயாவை துரோகிகள் என்ற அர்த்தத்தில் நான் பேசியதாக சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை. எனது காணொளியை பார்த்தால் நன்கு தெரியும்.

நகரசபைத் தவிசாளரை தேர்ந்தெடுப்பதிலே அதிருப்தியுற்று சதீஸ் அவர்கள் அந்தக் கூட்டத்தை பகிஷ்கரித்திருந்தார். சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார் சதீஸ் அவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடாரென்று. கூட்டத்தை பகிஷ்கரித்திருந்த சதீஸ் எவ்வாறு தவிசாளராக போட்டியிட்டிருப்பார். ஊடகப் பேச்சாளர் என்று கூறிக்கொண்டு தெரியாத விடயங்களைப் பற்றி சுமந்திரன் பேசக்கூடாது. தெரியாத விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் பதவியில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக செயல்பட்டவரின் உறுப்புரிமை பறிக்கப்பட்டு தற்போது அங்கு ஈபிடிபி ஆட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் ஏன் சதீஷினுடைய உறுப்புரிமை பறிக்க முடியாமல் போனது. ஜனாதிபதி சட்டத்தரணியான முடியாமல் போய்விட்டதா? உங்களுடைய கனிஷ்ட சட்டத்தரணிகள் சரியாக செய்யவில்லை என்றால் அதனை செய்விக்க வேண்டியது யார்?

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இந்த வழக்கில் ஐந்து தடவைக்கு மேல் சுமந்திரன் ஆஜராகி 42 மாதங்கள் கடந்தும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

சதீஷ் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்ததாக சுமந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.எனக்கென்னவோ சுமந்திரனுக்கு ரணிலுடன் பழைய நினைவுகள் வந்து விட்டது போல தான் தென்படுகிறது. சதீஸ் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட கணேஸ்வரன் வேலாயுதத்தின் இணைப்புச் செயலாளராகவே சம்பளத்துக்கு பணிபுரிந்தார்.

நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு அனுப்பியதாக சுமந்திரன் கூறும் கடிதத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு எழுதிய கடிதம் என்பது வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தொடர்பாக உள்ள பிரச்சினைகளை பற்றியதாகும். அதில் நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை.

நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் இல்லை ரெலோவிலும் இல்லை. ஆனால் நான் ஏதோ கள்ள உறவு வைத்திருப்பது போல சித்தரிக்கின்றார். வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக நான் செயல்பட்டேன்.

கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரையும் கூட்டிக்கொண்டு சுமந்திரன் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரை சுமந்திரன் சந்தித்திருக்கிறார். நீங்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை குழைக்கின்றீர்களா? யாழ் மாநகரசபையிலும் இதே வேலையை செய்தீர்கள்.

தவிசாளர் இல்லாதவிடத்து அடுத்த தவிசாளர் போட்டிக்கு உபதவிசாளரையே நியமித்திருக்க வேண்டுமென சுமந்திரன் கூறுகிறார். ஆனால் இதே விடயத்தை நல்லூர் பிரதேச சபையிலும் யாழ்ப்பாண மாநகர சபையிலும் அவர் செய்யவில்லையே? ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு சட்டத்தை சுமந்திரன் பயன்படுத்துகின்றரா?

நான் குருநாகலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டமை தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதி வேட்பாளராக குருநாகலில் போட்டியிட்டபோது சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருந்தேன். அதற்கு ஆதாரமாக வீக்லீஸ் வெளியிட்ட பதிவுகள் இருக்கின்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த பற்றீசியா அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய செய்தி குறிப்பில் சர்வதேச விசாரணையை கோரும் ஒரே ஒரு தமிழன் சிவாஜிலிங்கம் தான் என கூறியிருந்தார்.

2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இது கட்சியின் நிர்வாக செலவுக்காக வழங்கப்பட்டதா அல்லது பிரச்சாரத்துக்காக வழங்கப்பட்டதா என்பது வழங்கியவருக்கு தான் தெரியும். ஆகவே பகிரங்கமாகவே சொல்கிறேன் பணம் வழங்கியது உண்மை முடிந்தால் வழக்கு போடுங்கள். இன்னும் பல விடயங்கள் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது அதனை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்துவேன்.

ஒட்டுக்குழுக்கள் என்று ரெலோவையும் புளொட்டையும் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் அவர்களுடைய வாக்குகளையும் சேர்த்துத்தான் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார் என்பதை அவர் உணரவேண்டும் என்றார்.

No comments