கவிஞர் புலமைப்பித்தன் மறைந்தார்!


தீவிர தமிழ் தேசிய ஆதரவாளரான கவிஞர் புலமைப்பித்தன் மறைந்துள்ளார்.

புலமைப்பித்தனின் வீடு எங்களது இரண்டாவது தாயகம்' என்று தேசியத் தலைவர் பெருமையுடன் குறிப்பிடும் வகையில் ஈழப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்தவரும், எம்ஜிஆர் புலிகளுடன் நெருக்கமாகக் காரணமானவருமான தமிழீழப் பற்றாளர் கவிஞர் புலமைப்பித்தன் இன்று மறைந்துள்ளார்.

அவர் பற்றி தமிழக ஊடகவியலாளர் ஆரா வரைந்துள்ள குறிப்பில் 

"நீடுதுயில் கொண்ட  கூடுதுறையே நிம்மதியாய் உறங்குங்கள்....
புலவர் புலமைப்பித்தன் அவர்களை வாரத்துக்கு 4 முறை சந்திக்கும் அற்புத தருணங்கள் வாய்க்கப் பெற்றவன் நான்.

தமிழக அரசியல் இதழில்  "தலைவர் தம்பி நான்"என்ற தலைப்பில் எம்ஜிஆர் பிரபாகரன் ஆகியோருடன் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய அரசியல் பயணத்தில் இவ்விரு ஆளுமைகளை கடந்துவந்த வரலாற்றுத் தருணங்களையும் இணைத்து புலவர் புலமைப்பித்தன் ஒரு பெருந்தொடர் வடித்தார். 

அந்த தொடருக்காக... அவரை சம்மதிக்க வைத்து எழுத வைத்து வாரமிருமுறை அவரிடமிருந்து வரம் வாங்குவதுபோல் தொடர் வாங்குவேன்.
எம்ஜிஆர் பிரபாகரன் ஆகிய இருவரும் வரலாற்று நாயகர்களுடன் அவர் கொண்ட அன்பு பாசம் கருத்து முரண்பாடு கோபம் ஊடல் கூடல் என அனைத்தையும் என்னை தனது மயிலாப்பூர் இல்லத்தில் உட்கார வைத்து மணிக்கணக்கில் பேசுவார்.

எம்ஜிஆருடன்  நெருக்கமாக இருந்தவர்களில் புலவர் போல் பொருளாதாரத் தள்ளாட்டத்தில் இருந்தவர்களை நான் பார்த்ததில்லை. அது பற்றிக் கேட்கும்போதெல்லாம் வெள்ளை மீசையை சற்று வருடி விட்டு கரகரவென  சிரிப்பார்.

அலைபேசி செய்து 'ஆரா' என்று அவர்  நீட்டி முழக்கி அழைப்பதே ஒரு ரம்யமான ராகத்துடன் தான் இருக்கும்.

சில நேரங்களில் அசதி வந்து அழுத்தும்போது அந்த வாரத்திற்கான தொடரை அலைபேசியிலேயே என்னிடம் அளிப்பார். 'ஐயா இந்த இடத்தோடு நிறுத்திக்கொண்டு தொடரும் போட்டு விடலாம்' என்பேன். அவரது தொடர் என்றாலும் அழகாய் சம்மதிப்பார்.

பிரபாகரன் எம்ஜிஆர் ஆகிய இரு ஜீவநதிகள் கூடிடும் கூடுதுறையாக தனது அரசியல் இலக்கிய வாழ்வு  இருந்ததை அடிக்கடி சொல்லி பெருமிதப்படும் போது அவரது முகம் ஒரு வரலாற்று மலர்ச்சியை வாரிச்சூடிக் கொள்ளும்.

நீடு துயில் கொண்ட கூடுதுறையே நிம்மதியாக உறங்குங்கள். 

தலைதாழ்த்தி தமிழ் வணக்கம் செய்கின்றேன்."

No comments