சுய இச்சைக்காக சதிராடும் தமிழ்த் தேசிய கூத்தாடிகள் - பனங்காட்டான்


இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட மார்ச் மாத 49வது அமர்வில் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அடுத்த செப்டம்பரில் இடம்பெறும் 51வது அமர்விலேயே இலங்கை விவகாரம் தொடர்பான ஆணையாளரின் பூரண அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படும். இந்த ஒரு வருட இடைவெளியில் தமிழ்த் தேசிய தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாத்தியமில்லையெனில், அது சிங்களத் தரப்புக்கான வெற்றியை தங்கக் கிண்ணத்தில் வழங்கியதாகிவிடும். 

ஜெனிவா - இலங்கை நெடுஞ்சாலை கடந்த சில நாட்களாக மிகவும் நெரிசலாக காணப்படுகிறது. இந்த மாதம் 13ம் திகதி மனித உரிமைகள் ஆணையத்தின் நாற்பத்தெட்டாவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதே இதற்குக் காரணம். 

இந்த அமர்வின் முதல் நாளன்று மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பிப்பார். இதற்கான இலங்கை அரசின் பதிலை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மெய்நிகர் வழியாக வழங்குவார். 

இதற்கு நிகராக, இலங்கையில் தமிழர் தரப்பிலிருந்து ஏட்டிக்குப் போட்டியாக பல கடிதங்கள் சமர்ப்பணங்கள் என்ற பெயரில் பறந்து கொண்டிருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 46:1 இலக்கத் தீர்மானம், இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய பல முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்டியது. இலங்கையினால் ஜீரணிக்க முடியாதவையாக இவ்விடயங்கள் அமைந்திருந்தன. 

போர்க்குற்ற பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை என்பவைகளை நிறைவேற்றவென இலங்கையின் அனுசரணையுடன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகிக் கொள்வதாக கோதபாய அரசு அறிவித்ததையடுத்து உருவான புதிய களத்தில் 46:1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

குறிப்பிட்டுச் சொல்வதானால், ஆணையாளர் பச்சிலற் நேர்மையாக முன்வைத்த விடயங்களின் அடிப்படையில், பிரித்தானியா தலைமையில் கனடா உட்பட ஐந்து நாடுகள் முன்வைத்த இத்தீர்மானத்தில், முதன்முறையாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது சேர்க்கப்பட்டிருந்தது. 

இந்தியாவின் வேண்டுதலால் இது சேர்க்கப்பட்டதாயினும் தீர்மான நிறைவேற்றலில் இந்தியா வாக்கெடுப்பில் பங்குபற்றாது நடுநிலை என்ற பெயரில் ராஜரீக நகர்வை மேற்கொண்டிருந்தது. 

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆறு மாத காலத்துக்குள் சம்பந்தப்பட்ட தரப்பு எதனை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பது முக்கியமானது. அது இலங்கை அரசைச் சுட்டுவது. அதேசமயம் தமிழர் தரப்புக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் சில பங்குண்டு. 

முன்னைய சில பத்திகளில் குறிப்பிட்டது போன்று, ஜெனிவாவை மையப்படுத்தியே ஜி.எல்.பீரிஸ் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராக்கப்பட்டார். 2002 - 2004 ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் ரணில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ரணில் தரப்புக் குழுவின் தலைவராகப் பங்கேற்று சர்வதேசத்துக்கு அறிமுகமானவர் பீரிஸ். அதுமட்டுமன்றி சிங்களத்தின் குரலாக எப்போதுமே தம்மை அவர் வெளிக்காட்டி வந்ததால் இப்போது அவர் கோதபாய அரசுக்குத் தேவைப்பட்டார். 

இப்பதவியை ஏற்ற நான்கு வாரங்களுக்குள் அமெரிக்கா, ரஸ்யா, சீனா உட்பட பதினைந்துக்கும் அதிகமான வெளிநாட்டுத் தூதுவர்களையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலாளரையும் பீரிஸ் சந்தித்து உரையாடினார். அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் தம்முடன் கூட்டமைப்பின் சுமந்திரனையும் பங்குபெறச் செய்தது இவரது அரசியல் சாணக்கியம். 

இதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தரப் பிரதிநிதியையும் சந்தித்தார். இச்சந்திப்புகள் ஜெனிவாவில் இந்த மாதம் இலங்கை சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கை தொடர்பான உரையாடல்களை மையப்படுத்தியது. 

கோதபாய ஆட்சியில் காணாமல் போனோருக்கு செயலகம் உருவாக்கப்பட்டது, காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப திருத்தியமைப்பது, அரசியல் கைதிகள் விசாரணை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கென ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது போன்றவைகள் ஜெனிவாவை ஏமாற்றும் அடிப்படை நடவடிக்கைகள் என்பது மேற்குலகுக்கு புரியாததல்ல. 

எனினும், இவ்விடயங்களை ஜெனிவாவுக்கு சாதகமாக்கும் பதின்மூன்று பக்க அறிக்கையொன்றை அமைச்சர் பீரிஸ் அனுப்பியுள்ளார். இதன் பிரதிகள் இலங்கையிலுள்ள சகல வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிர்மூலமாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, எவரையும் இலகுவாக நம்ப வைத்து ஏமாற்றக்கூடியது. 

தமிழர் பிரதேச காணிகள் பங்களிப்பு நிர்வாகமானது தமிழ் அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே நடைபெறுகின்றன என்றும், மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றங்க ஊடாகவே இடம்பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஒற்றையாட்சி அமைப்பை தமிழர்கள் ஏற்றுள்ளனர் என்பது அழுத்திக் கூறி நிறுவப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பிளவுபடாத இலங்கை என்கின்ற ஒற்றை ஆட்சியில் இருப்பதற்கு மீண்டும் மீண்டும் உறுதியளித்து வந்ததை ஆதாரமாக வைத்தே இந்த வார்த்தைப் பிரயோகம் ஜெனிவாவுக்கான அறிக்கையில் புகுத்தப்பட்டுள்ளது (இது ஜெனிவாத் தீர்மானத்தில் பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கான நேரடிப் பதில்). 

பிளவுபடாத இலங்கைக்குள் என்ற அறிவிப்பை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அவரின் லெப்ரினன்ட்டாக இருக்கும் சுமந்திரனும் தொடர்ந்து தெரிவித்து வருவதை, கோதபாய அரசு தரப்பு தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளதை இங்கே அவதானிக்க முடிகிறது. 

இந்தச் சூழ்நிலையில் தமிழர் தரப்புகள் - முக்கியமாக, தமிழ்த் தேசியத்தை தமது பெயரில் முன்னிறுத்தியுள்ள கட்சிகள் ஒன்றுபட்டு ஒரே குரலில் தங்கள் நியாயப்பாடுகளையும், கோதபாய அரசின் நீதிக்குப் புறம்பான - எதேச்சாதிகார - இனப்பாகுபாடான - பயங்கரவாத தொடர் செயற்பாடுகளையும் ஜெனிவாவின் முன்னால் சமர்ப்பிப்பரென தமிழ் மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தனர். 

ஆனால் நடந்ததோ எதிர்மாறானது. ஆயுதங்கள் உறைநிலைக்குச் சென்ற பின்னரான பன்னிரண்டு ஆண்டுகளாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரை எத்தியும் ஏமாற்றியும் மேற்கொண்டு வரும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் இம்முறை அரங்கேறவில்லை. தமிழர் தரப்பு தாறுமாறாக தங்களுக்குள் பிளவுபட்டு, ஜெனிவாவின் முன்னால் தங்கள் இயலாமையை நிர்வாணமாக காட்டி நிற்கின்றது. 

தமிழரசு, ரெலோ, புளொட் என்பவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஓர் அணி. ஈ.பி.ஆர்.எல்.எவ்., சிறிகாந்தா - சிவாஜிலிங்கம் தரப்பு, அனந்தி சசிதரன் தரப்பு என்பவை விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணி என்ற பெயரில் இன்னோர் அணி. தமிழ் காங்கிரஸ் கட்சியைக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் தலைமையில் மற்றோர் அணி. இவை மூன்றுமே தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்தி நிற்பவை. 

கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் கூட்டமைப்பு பகிரங்கமாக இரண்டாகியுள்ளது. செல்வம் அடைக்கலநாதனின் ரெலோவும், சித்தார்த்தனின் புளொட்டும் ஒன்றிணைந்ததுடன் நின்றுவிடாது விக்னேஸ்வரனின் கூட்டணியுடனும் இணைந்து ஜெனிவாவுக்கு தனியாக ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. 

சில மாதங்களுக்கு முன்னர் சகலரையும் இணைத்து இயங்கவென முயற்சியெடுத்த ரெலோ, திடுதிப்பென பல்டி அடித்து, தமிழரசை தனியே நிற்க வைத்துவிட்டு புளொட்டோடு சேர்ந்து விக்னேஸ்வரனின் கூட்டணியுடன் சங்கமமாகி விட்டது. 

இது தமிழரசுக் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்களோடு, கூட்டமைப்பில் இருந்தவாறே ரெலோவும், புளொட்டும் இவ்வாறு இணைந்துள்ளதை அவர்களால் நம்பவே முடியவில்லை. 

அதேசமயம் தமிழரசுக் கட்சியின் ஒரு தரப்பினர் - சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மொத்தம் ஒன்பது பேர் தனியாக ஒரு கடிதத்தை ஜெனிவாவுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இவ்விடயம் சம்பந்தப்பட்டவர்களால் மறுக்கப்பட்டபோதிலும் உண்மையிலேயே கடிதம் அனுப்பப்பட்டதென்பது நிரூபணமாகியுள்ளது. 

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் கூட்டமைப்பின் தலைவர் என்ற பெயரில் சம்பந்தனும் ஒரு கடிதத்தை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளார். சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட இக்கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே ஒப்பமிட்டுள்ளார். கூட்டமைப்பின் மற்றைய எம்.பி.க்கள் பெயர்கள் இக்கடிதத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறதே தவிர ஒப்பமிடப்படவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற பெயரில் மாவை சேனாதிராஜாவின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்ககும் ரெலோவும் புளொட்டும் இணைந்து தனியான கடிதம் அனுப்பிய பின்னர், கூட்டமைப்பின் பெயரில் சம்பந்தன் இக்கடிதம் அனுப்பியிருப்பது பலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்த் தேசிய முன்னணி வழமைபோல ஜெனிவாவுக்கு தனிக்கடிதத்தை அனுப்பியுள்ளது. ஜெனிவாவின் 46:1 தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதால் இதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறு முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமாரும் செயலாளரான கஜேந்திரனும் ஒப்பமிட்டு இதனை அனுப்பியுள்ளனர். 

இவை அனைத்துக்கும் மேலாக, மிகமிக முக்கியமான ஒன்றாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் விக்னேஸ்வரன் இந்த வாரத்துப் புதன்கிழமை ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதம் அரசியல் தரப்புகளால் பார்க்கப்படுகிறது. அமைச்சர் பீரிஸ் ஜெனிவாவுக்கு அனுப்பிய பதின்மூன்று பக்க ஆவணத்துக்கு பதிலளிப்பதாக மட்டுமன்றி, அதிலுள்ள பொய்களையும் புனைவுகளையும் புட்டுக்காட்டுவதாக இக்கடிதம் அமைந்துள்ளது. 

தமிழ்த் தேசிய கட்சிகளின் ஜெனிவா கடிதங்கள் பற்றி விலாவாரியாக தமிழ் ஊடகங்கள் விரித்து வருவதனால் இவை பற்றி இங்கு மேலும் சிலாகிக்க வேண்டியதில்லை. தங்கள் சொந்த அரசியலுக்காகவும், தங்களின் எதிர்கால இருப்புக்காகவும் சுய இச்சை கொண்ட இவர்கள் வெவ்வேறு அணிகளாக பிளவுபட்டு நிற்பதால் ஜெனிவாவில் எதனையும் சாதிக்க முடியாது. 

தமிழர் தரப்பின் பிளவுகளால் ஏற்படக்கூடிய தீமைகளைப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலுள்ள கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜெனிவாவை பயன்படுத்தி கூட்டமைப்பை எவராலும் பிரிக்க முடியாது என்று கருத்து வெளியிட்டிருப்பது விந்தையானது. சிலவேளைகளில் முதுமை காரணமாக நிலைமையை உணராது (கூட்டமைப்பு பிளவுபட்டிருப்பதை) தூக்கத்திலிருந்தவாறு இவ்வாறு கூறுகிறாரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. 

கூட்டமைப்பின் தற்போதைய நிலை தொடர்பாக ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் - கூட்டமைப்பை உருவாக்கியவர்களும், தங்கள் இயக்கத்தின் பேராதரவோடு அதனை வளர்த்தவர்களும் விடுதலைப் புலிகள். இப்போது வளர்த்த கிடா மார்பில் பாய்வது போலுள்ளது. யாரோ ஒரு அழுகிய சட்ட மூளை உங்களைக் குழப்புகிறது. அந்தக் கெட்ட மூளையை கூட்டமைப்புக்கு வெளியே தூக்கிப் போடுங்கள், என்று கோருவதை எவரும் தட்டிக் கழிக்க முடியாது. அந்த அழுகிய மூளை யார் என்பதை சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. 

46:1 தீர்மானத்தின்படி இந்த மாதம் பதின்மூன்றாம் திகதி ஆரம்பமாகும் அமர்வில் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் பொறுப்புக்கூறல் உட்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பிப்பார். 

அடுத்த வருட மார்ச் மாத நாற்பத்தியொன்பதாவது அமர்வின்போது இதன் தொடர்பான எழுத்து மூல அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிப்பார். 

அதனைத் தொடர்ந்து, அடுத்த வருட செப்டம்பர் மாத ஐம்பத்தோராவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் மேம்படுத்தக்கூடிய நிலைமைகளை உள்ளடக்கிய பூரண அறிக்கையை எழுத்து வடிவில் ஆணையாளர் சமர்ப்பிப்பார். அவ்வேளை இது தொடர்பான உரையாடலும் இடம்பெறும். 

இன்று பிரிந்து பிளவுபட்டு ஒன்றையொன்று வெட்டி வீழ்த்தும் வகையில் ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்பி ஒருவர் காலை இன்னொருவர் இழுத்து வீழ்த்தும் தமிழ்த் தேசிய கட்சிகளை - அதன் தலைமைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரக்கூடிய எவராவது ஒருவர் இப்போது அவசியமாகிறார். 

இதனை நிறைவேற்றத் தவறின், ஜெனிவாவை தமிழ்க் கூத்தாடிகள் தங்களின் சுய இச்சைக்கான களமாகவே தொடர்ந்து பயன்படுத்துவர். இது போர்க்குற்றம் புரிந்த - தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்ற சிங்களத் தரப்பு தப்பிச்செல்ல வாய்ப்பளிக்கும். 

No comments