ஓப்பமிட்டவரே ஒப்புக்கொள்கையில் சுமா சொல்லும் போலி எது?ஜநா அமர்விற்கு முன்னதாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது தற்போதைய அமர்வு முக்கியமற்றதென சொல்லிய எம்.ஏ.சுமந்திரன் பின்னராக இரா.சம்பந்தன் ஊடாக ஜநாவிற்கு அனுப்பிய மகஜர் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன் .

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழரசின் சர்ச்சைக்குரிய ஜநாவிற்கான மகஜர் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய அவர் பல தடவைகளாக டெலோ ஊடாக எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்ட போதும் இழுத்தடிக்கப்பட்டதாலேயே கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள்,சி.வி.விக்கினேஸ்வரன் தரப்புடன் இணைந்து மகஜரொன்றை தயாரித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சியில் சி.சிறீதரன் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்பது பேரது மகஜரை தானே வடிவமைத்து ஒழுங்குபடுத்தியதாகவும் தானும் அதில் ஒப்பமிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் அதேநேரம் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்து போலியாக அம்மகஜரில் இடப்பட்டதாக கூறுகின்றார்.

இதில் ஒப்பமிட்டதாக சொன்ன சி.சிறீதரன் சொல்வது உண்மையா அல்லது அவர் போலியாக ஒப்பமிட்டதாக சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் உண்மையாவென்பது தெரியவில்லை.

இந்நிலையில் ஊடகங்களை அழைத்து மக்களை ஏமாற்றவும் உட்கட்சி மோதல்கள் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள வெறுப்பை திசைதிருப்பவுமே எம்.ஏ.சுமந்திரன் நாடகம் ஆடியதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை அங்கயன் இராமநாதனிற்கும் எமது விடுதலைப்போராட்டத்திற்கும் தொடர்புகள் ஏதுமில்லையென்பதால் அவர் வாய்மூடியிருப்பது நல்லதென தெரிவித்தார்.அவர் அமைதியாக தனது தொழில் முதலீடுகளையும் புதிய தொழில்களையும்,வியாபாரத்தை பார்ப்பதும் பொருத்தமானதெனவும் விடுதலைப்போராட்டம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனஅழிப்பு பற்றி வாய் திறக்க அங்கயனிற்கு அருகதை இல்லையெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜநாவிற்கு மகஜர்களை அனுப்புவதென்ற பேரில் மக்களை தமிழ் கட்சிகள் ஏமாற்றிவருவதாக அங்கயன் இராமநாதன் கருத்து வெளிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments