வடக்கு தொடர்ந்தும் அபாயத்தில்?

 


யாழ்.மாவட்டத்தில் இன்று புதன்கிழமை மட்டும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார். மொத்தமாக 10725 நபர்களுக்கு இற்றைவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்றைய கணக்கெடுப்பின்படி 213 நபர்கள் இதுவரை இறப்புக்குள்ளாகியுள்ளார்கள். மேலும் , 3686 குடும்பங்களை சேர்ந்த 10548 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். எனவும் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 ஆம் திகதி நாயாறு பகுதியில் தென்னிலங்கை மீனவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து நேற்றைய தினம் 24 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதேவேளை வவுனியாவில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோரோனாத் தொற்றால் மரணமடைந்துள்ளதுடன் 3585 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக வவுனியா மாவட்ட பதில் மாவட்ட செயலர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.


No comments