பன்றிக்கு வெடிமருந்து தயாரிப்பு! கணவனும் மனைவியும் படுகாயம்!!


அம்பாறை அளிக்கம்பை பகுதியில் வீட்டில் வெடிமருந்து தயாரித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (17) பிற்பகல் 4.30க்கு இடம்பெற்றுள்ளது.

அளிக்கம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய குலன் மற்றும் அவரது மனைவியான 62 வயதுடைய வெங்கட்மேரி என்பவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செலயகப் பிரிவிலுள்ள மேற்படிக் கிராமத்தில் இரவு வேளைகளில், யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் கிராமத்துக்குள் ஊடுருவி, பயிர்ச் செய்கைகளை நாசப்படுத்தி வருவது வழமை.

இந்நிலையில்,  பன்றிக்கு வெடி வைப்பதற்காக, யானை வெடிகளைப் பிரித்து, அதிலுள்ள மருந்துகளை சேர்த்து வீட்டிலேயே வெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது, அந்த வெடிமருந்து தவறுதலாக வெடித்துள்ளது. இதில் கணவனும் மனைவியும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரையும் முச்க்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பனங்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது என வைத்தியர் தெரிவித்த நிலையில், வைத்தியர் மீது,  முச்சக்கரவண்டி ஓட்டுநர் தாக்க முற்பட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments