இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு மரணதண்டனையாம்?இலங்கை நீதிமன்றங்களில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிப்பாய்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்ற நிலையில் படை அதிகாரிகளிற்கு மீணடும் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து வந்த ஞான சிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக, அச்சுவேலி 51 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் நகர 512 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் அவரது சிப்பாய் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


குறித்த வழக்கின் எதிரிகளின் கோரிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இருந்து திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்,ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் 2007 ஆம் ஆண்டு 12-ஆம் மாதம் 27ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தண்டனை சட்டக்கோவை 296 பிரிவின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


அதேநேரம் அது தொடர்பான விசாரணைகள் முடிவுற்று குறித்த வழக்கின் எதிரிகளுக்கு 2018ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 8ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.


அதன்போது முதலாம் எதிரியான யாழ்ப்பாணம் அச்சுவேலி 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி டி.ஆர்.பர்தலம்யுஸ் என்பவர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் குற்றத்தை நிரூபிக்க தவறியதால் முதலாவது எதிரியின் வழக்கு விசாரணை முடிவில் விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.மேலும் இரண்டாம் மூன்றாம் எதிரிகளுக்கான குற்றச்சாட்டுகள் அரச சட்டவாதியினால் நிரூபிக்கப்பட்டதால் இரண்டாம் மூன்றாம் எதிரிகளுக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களினால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.


எனினும் குறித்த தீர்ப்புக்கு எதிராக இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 20ஆம் திகதி மேன்முறையீட்டு காண விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.


இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இரண்டாம் மூன்றாம் எதிரிகளின் சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு அதனைத் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.ஆனாலும் 2018ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 8ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்படுவதோடு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிரிக்கு தெரிவிக்கும் பொருட்டு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு 8ஆம மாதம் 23ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் குறித்த இரண்டு எதிரிகளுக்கும் வாசித்து காட்டப்படவுள்ளது.


திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரியானது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் யாழ் நகர 512 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ராஜமந்திரி பியதாசகே பிரியந்த ராஜகருணா மற்றும் அவருடன் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் பியதாசகே பிரியந்த ராஜகருணா எனவும் தெரியவருகின்றது.

No comments