வந்தது பத்துக்கோடி கஞ்சா!

வடக்கினில் எதற்கு தட்டுப்பாடு நிலவினாலும் கஞ்சா மட்டும் தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றது.

அனலைதீவு கடற்பரப்பில் 344 கிலோ 550 கிராம் கேரளா கஞ்சாவை மீட்ட கடற்படையினர் , கஞ்சாவை கடத்தி வந்த மூவரையும் கைது செய்துள்ளனர். 

காங்கேசன்துறை கடற்படையினர் இன்றைய தினம் அதிகாலை கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக பயணித்த டிங்கி படகொன்றை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தினர்.  

அதன் போது படகில் 11 பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்ட 344 கிலோ 550 கிராம் கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவற்றை மீட்ட கடற்படையினர் , படகில் இருந்த மூவரையும் கைது செய்து படகையும் கைப்பற்றினர். 

மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருள் , படகு , கைது செய்யப்பட்ட மூவரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு வந்த கடற்படையினர் மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் அவற்றை ஒப்படைத்துள்ளனர்.  

அதேவேளை மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளின் சந்தை பெறுமதி 103 மில்லியன் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

No comments