அரியாலை கடலட்டை பண்ணைக்கு ஆனோல்ட் உதவி!

 


நல்லாட்சி காலமான 2016 இல் தொடங்கிய அரியாலை கிழக்கு கடலட்டை பண்ணைக்கு எம்.ஏ.சுமந்திரனின் வலதுகையும் யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் மின் உபகரணங்களை விநியோகித்தமை தெரியவந்துள்ளது.

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான மின் உபகரணங்களை 2018 இல் விற்பனை செய்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இது குறித்து தற்போதைய முதல்வர் மணிவண்ணன் விசாரணை நடத்துமாறு பணித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அரியாலை கிழக்கு கடலட்டை பண்ணையின் கிளையாக கிளிநொச்சி – கௌதாரிமுனை, கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை என தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தாலும் அந்த பண்ணை தடையின்றி இயங்குகின்றது.

குறித்த சீன – இலங்கை கூட்டு நிறுவனம் யாழ். அரியாலை பகுதியில் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நடத்திற்குச் செல்வதற்கு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை பயன்படுத்தி இந்த பண்ணையை நடத்திச் செல்கின்றமை தெரியவந்துள்ளது.

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை, குயிலான் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதிப் பத்திரத்திற்கு அமைய 899.99 சதுர மீற்றரில் சுமார் 70,000 அட்டைக் குஞ்சுகளை விருத்தி செய்வதற்கான அனுமதியே வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையிலேயே இந்த அனுமதிப் பத்திரத்தை அதிகார சபை வழங்கியுள்ளது. 

எனினும், இந்த நிலையத்தில் விருத்தி செய்யப்படுகின்ற அட்டைக் குஞ்சுகளை கிளிநொச்சி கௌதாரிமுனை – கல்முனை பகுதியில் உள்ள பண்ணையில் வளர்க்கும் செயற்பாடு அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்றது.


கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் இந்த பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.


முறையான அனுமதியின்றி இலங்கை கடலில் சீனப் பிரஜைகள் கடலட்டை பண்ணையை நடத்தி வருகின்றமை பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகின்றது.இதனிடையே, தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளரை, கிளிநொச்சி – கௌதாரிமுனை, கல்முனை அட்டைப் பண்ணையுடன் தொடர்புடைய இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று (28) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்த சந்திப்பை அடுத்து கருத்து தெரிவித்த குய்லான் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி, கடலட்டை பண்ணைக்கான ஆவணங்களை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கும் நடவடிக்கை, கொவிட் நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சட்டபூர்வமான அனுமதியின்றி சீனர்கள் நடத்திச் செல்கின்ற இந்த அட்டைப் பண்ணையை மூடி தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில் நிலவும் இந்த அசமந்த போக்கிற்கான காரணம் என்ன?

இலங்கையின் வட மாகாணத்தில் அண்மைக் காலமாக சீனாவுடன் தொடர்புடைய செயற்றிட்டங்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.

யாழ். மாவட்டத்திற்குரிய நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய மூன்று தீவுகளில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சீன தனியார் நிறுவனம் ஒன்றுக்கு காணிகளை வழங்க அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த பின்னணியில் தற்போது கடலட்டை பண்ணை தொடர்பிலான பிரச்சினையும் எழுந்துள்ளது.


No comments