வெடிக்கும் அபாயத்தில் கப்பல்!


கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில்,  9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய  திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ள நிலையில், நேற்று குறித்த தீயானது கப்பல் முழுதும் பரவியுள்ளது. கப்பலின் பின் பகுதியில் பரவ ஆரம்பித்த தீ தற்போது கப்பலின் முன்பகுதி வரை அனைத்து பகுதிகளையும் ஆட்கொண்டுள்ளதாக, நேற்றுகாலை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஊடாக முன்னெடுத்த மேற்பார்வையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று மாலையாகும் போது, கப்பலின் நடுப் பகுதியில் தீ பரவல் சற்று தணிந்திருந்ததாகவும், முன், பின் பகுதிகளில் தொடர்ந்தும் பாரிய தீ பரவலை அவதானிக்க முடிந்ததாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரியிடம் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் குறித்த கப்பலை நெருங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, குறித்த கப்பல் முழுதும் தீ பரவியுள்ள நிலையில், கப்பலின் எண்ணெய் தாங்கிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கப்பல் எண்ணெய் தாங்கிக்கு தீ பரவினால்  கப்பல் வெடித்து சிதறும் அபாயம் காணப்படுவதாக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனீ லஹந்தபுர குறிப்பிட்டார்.

No comments