சட்ட ஆட்சியும் நீதிமன்ற சுயாதீனமும் வலுவிழக்கக்கூடும் - கண்காணிப்பகம்


அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் மேலும் வலுவிழக்கக்கூடும்.

அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட அதிகாரிகளை விடுவிப்பதற்கு ஏதுவான வகையில் செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புபட்ட அதிகாரிகளை விடுவிப்பதற்கும் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கும் ஏற்புடைய வகையிலான தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதென்பது ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் வலுவிழந்துள்ள நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை மேலும் தொய்வடைச்செய்யும்.

இந்தத் தீர்மானமானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இது மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முடக்குவதுடன் ஊழல்மோசடிகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தையும் ஏனையோரையும் பாதுகாக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளன. ராஜபக்ஷ, தான் தொடர்புபட்டிருப்பது உள்ளடங்கலாக பல்வேறு மோசமான குற்றங்களை மறைப்பதற்காக முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு முயற்சியையும் அவர் விட்டுவைக்கவில்லை.

குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளான ஷானி அபேசேகர, நிஷாந்த சில்வா உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்படி ஆணைக்குழு அச்சுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் விளைவாக நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்துவம் ஆகியவை வலுவிழக்கலாம் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வினைத்திறனான செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

2008 - 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கல் சம்பவங்கள், கடற்படையின் சில உறுப்பினர்கள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் 11 மாணவர்கள் கொலைச்சம்பவம் ஆகியவை குறித்து இடம்பெறும் சட்டவிசாரணைகளை முடக்குவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.

மேலும் 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, 2009 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, 2010 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் ஆகியவை பற்றிய விசாரணைகளும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

இந்த வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள், அச்சம்பவங்கள் நடைபெற்றபோது தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச்செயலாளராகப் பதவி வகித்தமை தொடர்பில் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வழக்குகளில் காணப்பட்ட அரசியல் தலையீடுகள், ஏற்கனவே இவற்றுக்கான நீதிவழங்கல் பொறிமுறைகளைத் தாமதப்படுத்திவிட்டது. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதன் கடப்பாடுகளைப் பேணவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments