முஸ்லீம் நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது இலங்கை?



இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர, புர்கா தடை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மறுபுறம் ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக புர்காவை தடை செய்வது குறித்து அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீனி மோசடி தொடர்பில் பரவலாகப் பேசப்படுகின்றமையால் தேசிய கொடி வடிவ கால்மிதி துடைப்பான் மற்றும் புர்கா தடை உள்ளிட்ட விவகாரங்களில் அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தது.

இதேபோன்று தான் மரண தண்டனை கைதியான பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்ட விவகாரத்தை மறைப்பதற்காக பிரதமரால் பசுவதை சட்டம் குறித்த விடயம் பரப்பப்பட்டது.

எதிர்க்கட்சி பல விடயங்களையும் கூறி மக்களை ஏமாற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்கா தடை தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

அது தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது அரசாங்கமே என்பது தெளிவாகிறது.

No comments